கள்ளச்சாராய கும்பலுடன் கைகோர்த்த காவலர்கள்; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. மாவட்ட எஸ்.பியின் அதிரடி நடவடிக்கை!

 

கள்ளச்சாராய கும்பலுடன் கைகோர்த்த காவலர்கள்; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. மாவட்ட எஸ்.பியின் அதிரடி நடவடிக்கை!

தீவட்டிப்பட்டி சரகத்தில் கள்ள சாராயம் அதிகமாக புழங்கியதும், அதற்கு தனிப்பிரிவு சிறப்பு எஸ்ஐ பாபு உதவியதும் குறித்து தமிழக டிஜிபிக்கு புகார் சென்றது. 

ஊரடங்கால் அனைத்து டாஸ்மாக்குகளும் மூடப்பட்டுள்ளதால் கள்ள சாராய விற்பனை மீண்டும் தலை தூக்கியுள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் அதிகமாக நடந்து வருவதால் அம்மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காவலர்களே அதற்கு துணை நிற்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தின் தீவட்டிப்பட்டி சரகத்தில் கள்ள சாராயம் அதிகமாக புழங்கியதும், அதற்கு தனிப்பிரிவு சிறப்பு எஸ்ஐ பாபு உதவியதும் குறித்து தமிழக டிஜிபிக்கு புகார் சென்றது. 

ttn

அந்த புகாரின் பேரில், தனிப்பிரிவு சிறப்பு எஸ்ஐ பாபுவை மாவட்ட தீண்டாமை ஒழிப்புப் பிரிவுக்கு டிஜிபி இடமாற்றம் செய்தார். இவர் மட்டுமில்லாமல் இதில் இன்னும் சிலரும் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்ததால் மாவட்ட எஸ்பி தீபா கனிகர் அதிரடி விசாரணையில் இறங்கினார்.  அந்த விசாரணையில், தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் முருகன், சிறப்பு எஸ்ஐ ஜானகிராமன், தலைமைக் காவலர்கள் முத்து, சவுந்தரராஜன், விஜயபாலன் ஆகியோர் இதில் ஈடுபட்டிருப்பதாக சேலம் சரக டிஐஜி பிரதீப் குமாருக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதனையடுத்து சிக்கிய காவலர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், காவல் ஆய்வாளர் முருகன் காவல் நிலையத்தில் இருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். 

தற்போது தீவட்டிப்பட்டி காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், ஓமலூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தீவட்டிப்பட்டி காவல் நிலைய பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். காவல்துறைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் இத்தகைய காவலர்களை இடமாற்றம் செய்யாமல், பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.