கள்ளக்குறிச்சியில் மூதாட்டியைத் தாக்கி கொன்ற காவலர்களை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!

 

கள்ளக்குறிச்சியில் மூதாட்டியைத் தாக்கி  கொன்ற காவலர்களை கைது செய்க: ராமதாஸ்  வலியுறுத்தல்!

மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல்  அப்பாவி பெண் மீது காவலர்கள் நடத்திய அத்துமீறலும், தாக்குதலும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

கள்ளக்குறிச்சியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அவ்வழியே  உலகம்காத்தான்   கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர் தனது தாய் அய்யாமாளுடன்  பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவரை போலீசார் வழிமறிக்க அவர் வண்டியை நிறுத்தாமல் சிறிது தூரம் தள்ளி நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவரை தாக்க முற்பட்ட போது, அது அய்யம்மாளின்  மீது பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அவரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ramadoss

இந்நிலையில் இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார் . அதில்,  ‘கள்ளக்குறிச்சியில் வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற இரு சக்கர ஊர்தி ஓட்டுனர் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில், அந்த ஊர்தியில் பயணித்த மூதாட்டி காயமடைந்து சாலையில்  விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல்  அப்பாவி பெண் மீது காவலர்கள் நடத்திய அத்துமீறலும், தாக்குதலும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகம்காத்தான் காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற இளைஞர் அவரது தாயார் அய்யம்மாள் என்பருடன் நேற்று இரு சக்கர ஊர்தியில் கள்ளக்குறிச்சிக்கு  பயணித்துள்ளார். கள்ளக்குறிச்சி மிளகாய்த் தோட்டம் பகுதியில், இரு சக்கர ஊர்தி ஓட்டிகள் தலைக் கவசம் அணிந்து வருகிறார்களா? என்பதை அறிவதற்காக காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். செந்தில் வந்த இரு சக்கர ஊர்தியை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய போது, அவர் ஊர்தியை நிறுத்த தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தப்பித்து செல்வதாக நினைத்த சந்தோஷ் என்ற காவலர், தமது கையில் இருந்த லத்தியால் செந்திலை ஓங்கி தாக்கியுள்ளார். லத்தி அடியிலிருந்து தப்பிப்பதற்காக செந்தில் தலையை குனிந்து கொள்ள, அந்த லத்தி அடி செந்திலின் தாயார் அய்யம்மாள் மீது விழுந்துள்ளது. அதனால் காயமடைந்து சாலையில் விழுந்த அய்யம்மாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உயிருக்குப் போராடிய அய்யம்மாள் அங்கேயே உயிரிழந்தார்.

காவல்துறையினரின் அத்துமீறலால் அப்பாவி மூதாட்டி உயிரிழந்து விட்ட நிலையில், மனசாட்சியே இல்லாமல் காவலர்கள் செய்த அடுத்தக்கட்ட நடவடிக்கை தான் மிகவும் கொடூரமானது. தங்கள் மீதான கொலைப்பழியிலிருந்து தப்பிப்பதற்காக இளைஞர் செந்தில் மது அருந்தி விட்டு இரு சக்கர ஊர்தியை ஓட்டி வந்ததாகவும், போதையில் தமது தாயை வாகனத்திலிருந்து தள்ளி விட்டதால் அவர் உயிரிழந்து விட்டதாகவும் பொய்யான வழக்கை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. காவல்துறையினரின் இந்த செயல் எந்த வகையிலும் மன்னிக்க முடியாதது; இது கொலைக்குற்றத்திற்கு சமமான செயல் ஆகும்.

ttn

இரு சக்கர ஊர்தியில் பயணிப்பவர்கள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் ஆணைக்காக மட்டுமின்றி, பயணிகளின் பாதுகாப்பு கருதியும் அனைவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் ஆகும். அதை உறுதி செய்ய காவல்துறையினர் ஊர்தித் தணிக்கை செய்வதிலும் கூட தவறில்லை. ஆனால், ஊர்தித் தணிக்கையின் போது முரட்டுத்தனமாக வாகனங்களை தடுத்து நிறுத்தவும், ஊர்தி ஓட்டிகளை லத்தி கொண்டு தாக்கவும் காவல்துறையினருக்கு எந்த சட்டம் அதிகாரம் கொடுத்தது என்பது தெரியவில்லை. ஊர்தித் தணிக்கை என்ற பெயரில் சாலையின் குறுக்கே நின்று கொண்டு வாகனங்களை மறிப்பதும், எதிர்பாராத இத்தகைய செயல்களால் வாகன ஓட்டிகள் நிலைகுலைந்து சாலையில் விழுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

திருச்சி திருவெறும்பூரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ஆம் தேதி  வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற இரு சக்கர ஊர்தியை காமராஜ் என்ற ஆய்வாளர் துரத்திச் சென்று எட்டி உதைத்ததில், அந்த ஊர்தியில் கணவனுடன் பயணித்த உஷா என்ற கருவுற்ற பெண் சாலையில் விழுந்து இறந்தார். சென்னை கே.கே நகரில் வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற இளைஞனை காவல்துறை  துரத்திச் சென்றதில் ஊர்தி விபத்துக்குள்ளாகி அந்த இளைஞர் உயிரிழந்தார். கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி கூட சென்னை செங்குன்றம் அருகே வாகன சோதனையின் போது இரு சக்கர ஊர்தியில் வந்த பிரியா என்ற பெண்ணை காவலர்கள் திடீரென தடுத்து நிறுத்தினர். திடீரென நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் மீது  பின்னால் வந்த சரக்குந்து மோதி, ஏறியதில் பிரியாவின் இரு கால்களும் துண்டிக்கப்பட்டன. இத்தகைய விபத்துகள் அனைத்துக்கும் காவல்துறையினரின் அத்துமீறல்கள் தான் அடிப்படையான காரணம் ஆகும்.

வாகன சோதனையின் போது ஒரு வாகனம் நிற்காமல் சென்றால் கூட, அந்த வாகனத்தின் பதிவெண்ணை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அத்துமீறுதல் கூடாது. கள்ளக்குறிச்சியில் அத்துமீறி தாக்கி, மூதாட்டியின் சாவுக்கு காரணமாக இருந்த காவலர்கள், அம்மூதாட்டியின் மகன் மீதே பழி சுமத்தி வழக்கு பதிவு செய்வது அராஜகத்தின் உச்சமாகும். முதாட்டி அய்யம்மாளின் இறப்புக்கு காரணமான காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை போதுமானது அல்ல. அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 304-ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும். உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.