களைக்கட்டும் ராஜஸ்தான் தேர்தல் களம்: வெல்லப்போவது யார்?

 

களைக்கட்டும் ராஜஸ்தான் தேர்தல் களம்: வெல்லப்போவது யார்?

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது.

ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு வரும் 7-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு வெற்றி பெற்று எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இருகட்சிகளும் அம்மாநிலத்தில் கடும் சவாலுடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளன.

ராஜஸ்தானில் விவசாயிகளுக்கு உரிய உதவிகளை பாஜக செய்யவில்லை என்ற ஆதங்கமும், கோபமும் மக்கள் மத்தியில் உள்ளது. எனவே பா.ஜ.க. அங்கு மீண்டும் வெற்றி பெற இயலாது என்றும், காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.  

இதனால் கணிசமான அளவு எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு கொடுக்க வில்லை. அவர்கள் அனைவரும் பா.ஜ.க.வுக்கு போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளதால், ராஜஸ்தானில் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்பட்டு திணறிக் கொண்டிருக்கிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், தீவிர தேர்தல் பிரசாரத்தை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களில் மட்டும் அவர் 5 தடவை ராஜஸ்தானுக்கு சென்று ஆதரவு திரட்டியுள்ளார்.

இந்நிலையில், இன்று மீண்டும் ராஜஸ்தான் வருகை தந்த ராகுல், அஜ்மரில் உள்ள ‌ஷரிப் மற்றும் புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். அஜ்மர், ஜெய்சல்மார், பொக்ரான், ஜலூர், ஜோத்பூர் ஆகிய ஊர்களில் நடக்கும் பிரமாண்ட கூட்டங்களில் ராகுல் பேச உள்ளார்.

இதற்கிடையே பிரதமர் மோடியும் இன்று தேர்தல் பிரசாரம் செய்ய ராஜஸ்தான் வருகை தந்தார். இதனால் ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் பிரதமர் மோடியும், ராகுலும் போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பில் வாரா, துங்கர்பூர், கொடா ஆகிய ஊர்களில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். ராஜஸ்தானில் வரும் 5-ந் தேதியுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவடைய உள்ளது. அதற்கு இன்னும் 9 நாட்களே அவகாசம் உள்ள நிலையில், அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் சூடு பிடித்துள்ளது.