களிமண் சடலத்திற்கு இறுதி சடங்கு: மழை வேண்டி கிராம மக்களின் நூதன வழிபாடு!

 

களிமண் சடலத்திற்கு இறுதி சடங்கு: மழை வேண்டி கிராம மக்களின் நூதன வழிபாடு!

மழை வேண்டி அரியலூர் மாவட்டத்து கிராம மக்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர்: மழை வேண்டி அரியலூர் மாவட்டத்து கிராம மக்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகாவிலிருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர், டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ளமாக கரைபுரண்டு ஓடினாலும் தமிழகத்தின் கடைமடைப் பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் செல்லவில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கமாக இருக்கிறது.

குறிப்பாக, அரியலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மானாவாரி பயிர்கள், மழை இல்லாமல் கருகும் நிலையில் உள்ளது.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் விநோத வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். அந்த வழிபாட்டில், களிமண்ணால் செய்யப்பட்ட பெண் சடலத்துக்கு, உயிரிழந்தவர்களுக்கு செய்யப்படும் அனைத்து சடங்குகளையும் செய்து இடுகாட்டுக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு இறுதிச் சடங்குகளை செய்து கிராம மக்கள் அதை தீயிட்டு எரித்துள்ளனர். இவ்வாறு செய்யும் பட்சத்தில் மழை பொழியும் என்பது அந்த கிராம மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

தேவையற்ற இடங்களில் கொட்டித் தீர்த்து வரும் மழை, அரியலூர் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கருணை காட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.