கல்லூரி தேர்தலில் வரலாறு படைத்த திருநங்கை: வாழ்த்து கூறிய எம்பி கனிமொழி

 

கல்லூரி தேர்தலில் வரலாறு படைத்த திருநங்கை: வாழ்த்து கூறிய எம்பி கனிமொழி

சென்னை லயோலா கல்லூரியில் யூனியன் தேர்தலில் வெற்றிபெற்ற திருநங்கை நலீனா ப்ரஷீதாவுக்கு திமுக எம்பி  கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார். 

சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் யூனியன் தேர்தலில் வெற்றிபெற்ற திருநங்கை நலீனா ப்ரஷீதாவுக்கு திமுக எம்பி  கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார். 

வளர்ந்து வரும் இன்றைய நவநாகரீக உலகில் இன்றைய சூழலில் பல திருநங்கைகள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை லயோலா கல்லூரியில் யூனியன் தேர்தலில் நலீனா ப்ரஷீதா என்ற திருநங்கை  தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார்.  முதுகலை இரண்டாமாண்டு படிக்கும் இவர்  இதே கல்லூரியில்தான் இளங்கலை பட்டமும் பெற்றார். லயோலா கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமை பெற்ற  இவர், மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளராகத் தேர்வாகியுள்ளார். 

naleena

இதுகுறித்து கூறியுள்ள நலீனா,  கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தலிலேயே நான் நிற்பதாக இருந்தது. ஆனால் சில பிரச்னை காரணமாகத் தேர்தல் ரத்தானது. ஆனால்  அப்போதே சகா மாணவி ஒருவர், உனக்கு ஒரு ஓட்டாவது விழுமா? என்று யோசித்து பார் என்று நக்கலடித்தார். நான் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவில்லை. ஆனால் இந்தத் தேர்தலில் சக மணவர்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தேர்தல் அறிக்கையில் சொன்ன எல்லாவற்றையும் மாணவர்களுக்குச் செய்து கொடுப்பேன்’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில்,  சென்னை லயோலா கல்லூரியில் யூனியன் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள திருநங்கை நலீனா ப்ரஷீதாவுக்கு  திமுக  தூத்துக்குடி எம்பி, கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார்.  இது குறித்து  அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில்  திருநங்கை சகோதரி நளினா பிரசிதா  அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. நளினா அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் தேர்தலில் வெற்றிபெற்ற நலீனாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.