கல்லுக்குள் ஈரம்: ஆனாதையாக கிடந்த குழந்தைக்கு தாயுள்ளத்துடன் தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸ்

 

கல்லுக்குள் ஈரம்: ஆனாதையாக கிடந்த குழந்தைக்கு தாயுள்ளத்துடன் தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸ்

ஆனாதையாக கிடந்த குழந்தைக்கு தாயுள்ளத்துடன் தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

ஹைதராபாத்: ஆனாதையாக கிடந்த குழந்தைக்கு தாயுள்ளத்துடன் தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

போலீசார் என்றாலே முரட்டு குணமுடைய கடுமையானவர்கள் என்று தான் பலரும் நினைத்திருப்போம். ஆனால், கல்லுக்குள் ஈரம் இருப்பதை போல, அவர்களுக்குள்ளும் இரக்கமான மென்மையான குணம் உள்ளது என்பதை ஹைதராபாத்தை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் நிரூபித்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பொது மருத்துவமனை அருகே நின்று கொண்டிருந்த இர்பான் என்பவரிடம் வந்த பெண் ஒருவர் தனது கையில் வைத்திருந்த குழந்தையை சற்று நேரம் பார்த்துக் கொள்ளுமாறு ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். ஆனால், நெடுநேரமாகியும் அப்பெண் வராததால் குழந்தை அழத் தொடங்கியுள்ளது. குழந்தையை சமாதானம் செய்ய முயன்றும் இர்பானால் முடியவில்லை. அக்குழந்தையின் தாயையும்  அவரால் கண்டு பிடிக்க முடியாததால், தனது வீட்டுக்கு சென்று பால் பாக்கெட் வாங்கி காய்ச்சி அக்குழந்தைக்கு கொடுத்துள்ளார். ஆனாலும் குழந்தையின் அழுகையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து, அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்ற இர்பான் நடந்தவற்றை எடுத்துக் கூறி குழந்தையை அங்கு ஒப்படைத்து விட்டு சென்றுளார். அப்போது ரவீந்தர் என்ற காவலர் பணியில் இருந்துள்ளார். அவரது மனைவியும் ஒரு காவலர் தான். இவர்களுக்கு கைக்குழந்தை ஒன்று உள்ளது. கதறி அழும் குழந்தையை பார்த்து பரிதாபம் கொண்ட ரவீந்தர், இதுகுறித்து தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வாடகைக்கு ஒரு காரை பிடித்து நேராக காவல் நிலையம் வந்த பிரியங்கா, குழந்தையை அள்ளி எடுத்து, ஆசுவாசப்படுத்தினார். சற்றே அமைதி அடைந்த குழந்தை மீண்டும் அழத் தொடங்கவே, பிரியங்காவுக்கு குழந்தை ஏன் எழுகிறது என புரிந்து விட்டது. குழந்தையை மறைவான இடத்துக்கு சென்று மார்போடு அணைத்து, தன்பிள்ளை போல் நினைத்து அதற்கு தாய்ப்பால் ஊட்டினார். இதனால், குழந்தையின் அழுகை மட்டும் அல்ல பசியும் அடங்கியது.

அதன்பிறகு தலைமறைவான குழந்தையின் தாயை போலீசார் தேடி கண்டுபிடித்தனர். அந்த பெண் சாலைகளில் குப்பை பொறுக்குகிறவள் என்பது தெரியவந்தது. அவளிடம் குழந்தையை ஒப்படைத்து அறிவுரை சொல்லி போலீசார் அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த, ஹைதராபாத் மாநகர போலீஸ் கமிஷனர் அஞ்சானிகுமார், பெண் போலீஸ் பிரியங்காவையும், அவரது கணவரையும் பாராட்டினார். இதனிடையே, இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, பெண் போலீசுக்கும் அவரது கணவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.