கல்யாண தடை நீக்கும் கிணார் திருக்கோவில்

 

கல்யாண தடை நீக்கும் கிணார் திருக்கோவில்

கல்யாண தடைகள் நீங்கவும் கண் பார்வை கோளாறுகள் நீங்கவும் வழிபடவேண்டிய மிக சிறப்பான திருக்கோவில் கிணார்.

கண்பார்வைக் கோளாறுகளால் அவதியுறுவோர் பல்வேறு ஸ்தலங்களில் இறைவனை வழிபட்டு, அந்த குறை நீங்கப்பெற்றதாக வரலாறுகளும்,செவிவழி செய்திகளிலும் நாம் கேட்டிருக்கிறோம். அதுபோல,ஆயிரம் கண் நோய்க்கு ஆளான தேவேந்திரன்,சாப விமோசனம் பெற்ற ஸ்தலமாக விளங்குவது திருக்கண்ணார் எனும் கிணார் திருத்தலம் ஆகும்.

இந்த கோவில் கருவறை பின்னால் திருமாலும்,பிரம்மாவும்,வலக்கரத்தினை வளைத்து சாளரம் வீசுவது போன்ற அமைப்பு வேறு எந்த கோவில்களிலும் இல்லாத அற்புத நிகழ்வாகும்.இந்த ஆலயம் பல்லவ காலத்தில் கட்டப்பட்டதாக  ஆய்வுகள் கூறுகின்றன.தேவார பாடல் பெற்ற ஸ்தலம்.ஞான சம்பந்தரும் இந்த ஆலயத்தினை பற்றி தன் பாடல்கள் மூலம் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திரன் இங்கு வழிபட்டதை உறுதிப் படுத்தும் வகையில்,மூலவர் நேத்ரபுரீசுவரரை வணங்கும் பாவனையில், கருவறை எதிரே, நந்திக்கு இடையே மறித்தபடி, ஐராவதத்தில் அமர்ந்தவாறு கரங்கூப்பிய வடிவில் இருக்கிறார்.“வச்சிராயுதம்’ ஏந்திய நிலையில் அமைத்து அவர் இந்திரனே என்று உறுதிப்படுத்துகிறது சிலை வடிவம். வேறு எந்த ஆலயத்திலும் நந்திக்கும் மூலவருக்கும் இடையே இந்திரன் சிலை இருக்கிறது என்பது தனி சிறப்பு.மேலும் இதுபோன்ற சிலை வடிவத்தை வேறு எந்த கோயில்களிலும் காண முடியாது.

இந்திரன் தன் கண் தொடர்பான நோய்கள் நீங்க வழிபட்ட ஸ்தலம் என்பதால் இங்கு வந்து கண் குறைபாடு நீங்க வழிபாடு செய்யப்படுகிறது .மேலும் திருமண வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தில் மூலவரையும் அம்பாளையும் தரிசித்து அபிசேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்தால் திருமணம் உடனடியாக நடைபெறும் என்பது அந்த பகுதியில் உள்ள மக்களின் முழுமையான நம்பிக்கை ஆகும்.

மூலவர்: நேத்ரபுரிஸ்வரர்

அம்பாள்: அம்பா நாயகி

ஸ்தல விருட்சம் : அத்திமரம்

அமைவிடம்: செங்கல்பட்டில் இருந்து மதுராந்தகம் செல்லும் வழியில் கருங்குழியில் இருந்து கிழக்கு நோக்கி ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த திருக்கோவிலை அடையலாம்.