கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி சென்ற அவலம்; பாதி வழியில் பிரசவம்-அதிர்ச்சி வீடியோ

 

கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி சென்ற அவலம்; பாதி வழியில் பிரசவம்-அதிர்ச்சி வீடியோ

விஜயநகரம்: ஆந்திர மாநிலத்தில் முறையான சாலை போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால், கர்ப்பிணி பெண்ணை தொட்டில் கட்டி சுமந்து சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின பெண் முத்தம்மா. கர்ப்பிணியான இவருக்கு சில தினங்களுக்கு முன்னர் திடீரென பிரசவ வலி எடுத்துள்ளது. இதையடுத்து, அவரது கிராமத்தில் இருந்து சுமார் 7 கி.மீ., தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது உறவினர்கள் முடிவெடுத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்ல அவர்களது கிராமத்தில் இருந்து முறையான சாலை போக்குவரத்து வசதி இல்லை.

எனவே, மூங்கில் குச்சிகள், கயிறுகள் மற்றும் துணியைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொட்டிலில்  அவரை ஏற்றி குடும்ப உறுப்பினர்கள் தூக்கிச் சென்றனர். வனப்பகுதியில் சேறு நிறைந்த மிகவும் மோசமான வழியில் கர்ப்பிணி பெண்ணை அவரது உறவினர்கள் சுமந்து சென்றனர். சில கிலோமீட்டர் தூரம் சென்றதும் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால், மூங்கில் தொட்டில் பாதி வழியில் இறக்கப்பட்டு, சில உறவுக்கார பெண்களின் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டது. குழந்தையின் தொப்புள் கொடிபிளேடால் அறுத்து எடுக்கபட்டது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ வசதிக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. இதுகுறித்துப் பலமுறை அதிகாரிடம் பேசியும் எந்த உதவியும் எங்களுக்கு கிடைக்கவில்லை என கிராமவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.