கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் அளித்த விவகாரம்: ரத்தத்தை தானம் செய்த இளைஞர் உயிரிழப்பு!

 

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி  ரத்தம் அளித்த விவகாரம்: ரத்தத்தை தானம் செய்த இளைஞர் உயிரிழப்பு!

சாத்தூர் கர்பிணிக்கு எச்.ஐ.வி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், ரத்தம் தானம் கொடுத்த இளைஞர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

விருதுநகர்: சாத்தூர் கர்பிணிக்கு எச்.ஐ.வி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், ரத்தம் தானம் கொடுத்த இளைஞர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அப்பெண்ணின் உடலில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாகவும், உடனே ரத்தம் ஏற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதனையடுத்து, அப்பெண்ணுக்கு ரத்தம் ஏற்றும் பணிகளில் மருத்துவமனை ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன்படி, ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது. ஆனால், தானமாக பெறப்பட்டு கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச்ஐவி நோய் தொற்று இருப்பது தெரிய வந்ததையடுத்து அப்பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். 

hiv

இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, விசாரணை நடத்தியபோது சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சில நாட்களுக்கு முன்பு உறவினரைப் பார்க்கச் சென்ற இளைஞர், உறவினருக்காக ரத்தம் வழங்கியுள்ளார். அதனையடுத்து வெளிநாடு செல்வதற்காக அந்த இளைஞர் மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை தெரிந்து கொண்டுள்ளார்.

உடனடியாக அவர், சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு போன் செய்து தன்னுடைய ரத்தத்தை யாருக்கும் ஏற்ற வேண்டாமென கூறியுள்ளார். ஆனால் எச்சரிக்கை கொடுக்கப்படும் முன்பாக அந்த ரத்தம் பரிசோதனை செய்யப்படாமல், சாத்தூர் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இளைஞர், தாமாக முன்வந்து மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்ததை அனைவரும் பாராட்டிவந்த நிலையில், குற்றவுணர்வு காரணமாக, கமுதியைச் சேர்ந்த அந்த இளைஞர் சாப்பாட்டில் எலி மருந்து கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மிக ஆபத்தான நிலையில்  சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.