கர்நாடகா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: காங்., கூட்டணி முன்னிலை

 

கர்நாடகா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: காங்., கூட்டணி முன்னிலை

கர்நாடக மாநிலத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் ஷிமோகா, பெல்லாரி, மாண்டியா மக்களவை தொகுதிகளின் எம்.பி.,-க்கள் ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிகளுக்கும், ராமநகரா, ஜமாகாந்தி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கண்டன. பெல்லாரி, ஜமாகாந்தி ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், ஷிமோகா, மாண்டியா, ராமநகரா ஆகிய தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தின. பாஜக ஐந்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 67 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முடிவுகள் மாலையில் அறிவிக்கப்படவுள்ளன. மொத்தம் 5 இடங்களில் நடைபெறும் இந்த வாக்கு எண்ணிக்கையில் 1248 வாக்கு எண்ணும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தற்போது வரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், பெல்லாரி, மாண்டியா மக்களவை மற்றும் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் – மதசார்பற்ற கூட்டணி முன்னிலையில் உள்ளது.