கர்நாடகாவுக்கு 3 துணை முதலமைச்சர்கள்…… ஆட்சியை காப்பாற்ற போராடும் முதல்வர் எடியூரப்பா….

 

கர்நாடகாவுக்கு 3 துணை முதலமைச்சர்கள்…… ஆட்சியை காப்பாற்ற போராடும் முதல்வர் எடியூரப்பா….

கர்நாடகாவில் முதல் முறையாக 3 துணை முதலமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், புதிதாக பதவியேற்ற 17 அமைச்சர்களுக்கு துறைகளையும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா ஒதுக்கீடு செய்தார்.

கர்நாடகாவில் மதசார்ப்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்ததையடுத்து பா.ஜ. ஆட்சியை பிடித்தது. பா.ஜ. தலைவர் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். அவர் பதவியேற்று சுமார் 20 கழித்தே மாநில அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டனர். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ. அரசில் 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

லட்சுமன் சாவதி

அதேசமயம், தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த சில பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் அது கிடைக்காததால் அதிருப்தி அடைந்தனர். அவர்களை சமாளிக்க வாரிய தலைவர் பதவி போன்றவற்றை வழங்க அந்த கட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.

இதற்கிடையே புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு கடந்த ஒரு வாரமாக துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று, கோவிந்த் கர்ஜோல், ஆஷ்வாத் நாராயன் மற்றும் லட்சுமணன் சாவதி ஆகியோரை துணை முதலமைச்சர்களாக எடியூரப்பா நியமனம் செய்தார். மேலும், புதிதாக நியமனம் செய்யப்பட்ட அமைச்சர்கள் 17 பேருக்கும் முதல்வர் எடியூரப்பாக துறைகளை ஒதுக்கீடு செய்தார்.

கோவிந்த கர்ஜோல்

துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோலுக்கு பொதுப்பணித்துறை மற்றும் சமூக நலத்துறையும்  வழங்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் ஆஷ்வாத் நாராயன் உயர்கல்வி, ஐ.டி. அண்டு பி.டி. சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி துறைகளை கவனிப்பார். துணை முதல்வர் லட்சுமன் சாவதிக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது கவுன்சில் உறுப்பினர் கூட இல்லாத லட்சுமன் சாவதியை அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் துணை முதல்வர் பதவி கொடுத்து இருப்பது பா.ஜ. மூத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.