கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து?

 

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து?

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பாஜக-வில் சேரப் போவாதாக வெளியான தகவல் அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பாஜக-வில் சேரப் போவாதாக வெளியான தகவல் அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 104 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்தது. காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், மஜத கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தொடர்ந்து, மஜத தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மஜத கட்சியின் குமாரசாமி கர்நாடக மாநில முதல்வரானார்.

இந்நிலையில், அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ், மஜத கட்சி எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை பிடிக்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அமைச்சர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள பி.சி.பட்டீல், பீமா நாயக், ஹொலகேரி, பிரதாப் பட்டீல், கணேஷ் ஹூக்கேரி, உமேஷ் ஜாதவ் உள்ளிட்ட 12 எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜக-வில் சேரப் போவதாக தகவல்கள் வெளியானது. இது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ராஜினாமா செய்யப் போவதாக கூறப்படும் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான கணேஷ் ஹூக்கேரி தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக போவதில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால், ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த் சிங், நாகேந்திரா உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் தலைவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

மொத்தம் 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், ஆளும் கூட்டணிக்கு, சபாநாயகரை தவிர்த்து 116 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. பாஜக-வுக்கு 104 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். எனவே, எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்து ஆளும் கூட்டணியின் பலத்தை குறைத்து, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க பாஜக திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம், எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கும் குதிரைபேரமும் அங்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எம்எல்ஏ-க்களிடம் பாஜக-வினர் எவ்வளவு பணம் பேரம் பேசினார்கள்? என்ன மாதிரியான விஷயங்கள் பேசினார்கள் என்ற ஆதாரங்களை வெளியிடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான டி.கே.சிவக்குமார், கர்நாடகத்தில் கூட்டணி அரசை கவிழ்ப்பதில் பாஜக ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் குமாரசாமி, கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடைபெறுகிறது. ஆனால், எனது ஆட்சிக்கு அச்சுறுத்தல் இல்லை. பாஜக யாரை தொடர்பு கொள்கிறது, என்ன தருவதாக சொல்கிறார்கள் என்பது எல்லாம் எனக்கு தெரியும். இதை நான் கையாளுவேன் என்றார்.