கருவை மாற்றும் வினோத பூஜை; கர்ப்பிணியை கொன்ற பெண் சாமியார்-திடுக்கிடும் தகவல்!

 

கருவை மாற்றும் வினோத பூஜை; கர்ப்பிணியை கொன்ற பெண் சாமியார்-திடுக்கிடும் தகவல்!

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழு மாத கர்ப்பிணியான ஜஸ்பிர் கவுர் (32) எனும் பெண்ணை காணவில்லை என அவரது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

சண்டிகர்: குழந்தையில்லா பெண்ணுக்கு, கர்ப்பிணி பெண்ணின் கருவை மாற்றும் வினோத பூஜையில் கர்ப்பிணியை கொலை செய்த பெண் சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழு மாத கர்ப்பிணியான ஜஸ்பிர் கவுர் (32) எனும் பெண்ணை காணவில்லை என அவரது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசாரிடம், ஜஸ்பிர் கவுர் கடைசியாக ராஜ்விந்தர் கவுர் (30) எனும் குழந்தையில்லா பெண்ணுடன் கிராமத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் பெண் சாமியார் தேஷோ (45) என்பவரின் வீட்டுக்கு சென்றதை சிலர் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

pregnant woman

இதையடுத்து, தேஷோவிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவிக்க, அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். அதில், பல திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.

tantrik

இதுகுறித்து போலீசார் கூறுகையில், திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த ராஜ்விந்தர் கவுர் மற்றும் அவரது உறவினர்கள் பூரண் சிங் மற்றும் ஜோஹிந்தர் கவுர் ஆகியோர் பெண் சாமியார் தோஷோவை அணுகியுள்ளனர். அவர்களிடம் கர்ப்பிணி பெண்ணின் கருவில் இருக்கும் கருவை ராஜ்விந்தர் கவுரிடம் மாற்றுவதாக தோஷோ உறுதியளித்துள்ளார்.

அதன்படி, ஜஸ்பிர் கவுரை தேஷோவின் வீட்டுக்கு ராஜ்விந்தர் கவுர் சில வேலைகள் இருப்பதாக பொய் சொல்லி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரது உறவினர்கள் பூரண் சிங், ஜோஹிந்தர் கவுர் மற்றும் அவர்களது குழந்தைகள் நீத்து அமன் கவுர் ஆகியோர் ஏற்கனவே இருந்துள்ளனர்.

arrest

தனது வீட்டில் வைத்து ராஜ்விந்தர் கவுர் மற்றும் அவர்களது உறவினர்களின் உதவியுடன் ஜஸ்பிர் கவுரின் கழுத்தை நெறித்து தோஷோ கொலை செய்துள்ளார். பின்னர், அவரது வயிற்றை அறுத்து அதில் இருந்து உயிரிழந்த கருவை வெளியே எடுத்து ராஜ்விந்தர் கவுரின் வீட்டில் புதைத்துடன், ஜஸ்பிர் கவுரின் சடலத்தை பெட்டியில் வைத்து ராஜ்விந்தர் கவுரின் வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளனர். அவரது சடலம் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பெண் சாமியார் தோஷோ, பூரண் சிங், ஜோஹிந்தர் கவுர் ஆகியோரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மூவரை தேடி வருகின்றனர்.