கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பான வெற்றி; மாஸ் காட்டிய மறையூர் வெல்லம்!

 

கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பான வெற்றி; மாஸ் காட்டிய மறையூர் வெல்லம்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் வெல்லத்திற்கு புவியியல் குறியீடு கிடைத்துள்ளது

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் வெல்லத்திற்கு புவியியல் குறியீடு கிடைத்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. இங்குள்ள சந்தன காடுகள், பழங்கால கல்வீடுகள், ராஜீவ்காந்தி சிறுவர் பூங்கா, காய்கறி, பழ தோட்டங்கள் ஆகியவற்றை பார்ப்பதற்காக ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இங்குள்ள தூவானம்நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணி களை கவரும் வகையில் உள்ளது.

marayoor jaggery

இது ஒருபுறமிருக்க, இங்கு கரும்பினால் தயாரிக்கப்படும் வெல்லம் மிகவும் சிறப்பு பெற்றது. மறையூர் வெல்லத்திற்கு “மவுசு’ உள்ளதால், அது தயாரிக்கப்படும் விதத்தை சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று ரசிப்பதோடு, அதனை வீடுகளுக்கும் வாங்கி செல்வர்.

மறையூரில் காய்கறிகளுக்கு அடுத்தபடியாக, கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் கரும்புகள் வெட்டப்பட்டு, கிரஷர் மூலமாக அரைத்து கரும்புச்சாறு தயாரிக்கப்படுகிறது. பின் கரும்புச்சாறு பெரிய கொப்பரையில் இட்டு, நன்றாக காய்ச்சப்படுகிறது. பின்னர் பதமான கரும்புச் சாறு உருண்டையாக பிடிக்கப்பட்டு, ரசாயனப் பொருட்கள் அதிகம் கலக்காமல், வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.

marayoor jaggery

ஆனால், மறையூர் வெல்லம் என்ற பெயரில் போலிகளும் விற்பனை செய்யப்படுவதால், சந்தையில் உரிய விலை கிடைக்காமல் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு சாகுபடியை விட்டு விடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி, கிலோ ஒன்றுக்கு ரூ.45 முதல் ரூ.47 வரை மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது. ஆனால், கிலோ ஒன்றுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

marayoor jaggery

இந்த நிலையில், கேரள மாநில விவசாயத்துறையின் கடந்த இரண்டு ஆண்டுகால கடும் போராட்டத்துக்கு பின்னர், மறையூர் வெல்லத்திற்கு புவியியல் குறியீடு கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், போலிகளை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைச்சாவடிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு போலிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், இந்த புவியியல் குறியீடு மூலம் சந்தையில் அதிக விலை கிடைக்கும் எனவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புவியியல் குறியீடு என்பது ஓர் வறையறுக்கப்பட்ட புவியியல் எல்லைக்குள் அவ்விடத்திற்கே உரித்தான சிறப்பு அம்சங்களுடன் உருவாகும் ஒரு பொருளுக்கு அல்லது கலைக்கு வழங்கப்படும் சிறப்புக் குறியீடு ஆகும். இக்குறியீட்டை பெறுவதன் மூலம் அந்த பொருள் அல்லது கலையை வேறு யாரும் வியாபார நோக்கத்துடன் போலியாவோ, சிறப்பு அம்சங்களை வேறு வகையிலோ உபயோகப்படுத்த முடியாது. இக்குறியீட்டின் கீழ் தங்களைப் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்தக் குறியீட்டை உபயோகிக்கும் உரிமை உண்டு. இதனை தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.