கருணை மனு நிராகரிப்பு…… நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

 

கருணை மனு நிராகரிப்பு…… நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குடியரசு தலைவர் தனது கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தலைநகர்  டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மாணவி உயிர் இழந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறார் என்பதால் சில ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது.

உச்ச நீதிமன்றம்

நிர்பயாக வழக்கு குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்து தங்களது தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட்டு வந்தனர். இருப்பினும், நீதிமன்றம் அவர்களது மனுக்களை நிராகரித்தது. மேலும் கடந்த 22ம் தேதி தூக்கிலிட நீதிமன்றம்  உத்தரவிட்டது இந்நிலையில் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தூக்கு தண்டனை ரத்துசெய்யக்கோரி குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால் முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசு தலைவர் ராம் நாத் சிங் நிராகரித்து விட்டார். இதனையடுத்து பிப்ரவரி 1ம் தேதியன்று குற்றவாளிகள் 4 பேரையும்  தூக்கிலிட நீதிமன்றம் புதிய டெத் வாரண்ட் பிறப்பித்தது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே

இந்நிலையில், தனது கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்கும்படி முகேஷ் சிங்கின் வழக்கறிஞர்  நேற்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தாக்கல் செய்த  எந்தவொரு மனுவையும் விசாரிப்பதில் நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுக்கும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தெரிவித்தார். குற்றவாளி முகேஷ் சிங்கின் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன் மற்றும் ஏ.எஸ். போபன்னா ஆகியோர் அடங்கி அமர்வு விசாரிக்கிறது. குடியரசு தலைவர் தனது கருணை மனுவை முறையாக மனதில் கொள்ளாமல் அவசர அவசரமாக நிராகரித்து விட்டார் என குற்றவாளி முகேஷ் சிங் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.