கருணை மனுவை நிராகரித்த குடியரசு தலைவர்… நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்ககோரி நீதிமன்றத்தில் மனு

 

கருணை மனுவை நிராகரித்த குடியரசு தலைவர்… நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்ககோரி நீதிமன்றத்தில் மனு

குற்றவாளி பவன் குமார் குப்தாவின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததையடுத்து, நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற புதிய தேதியை அறிவிக்கக்கோரி நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு தாக்கல் செய்தது.

டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மாணவி உயிர் இழந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறார் என்பதால் சில ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது. நிர்பயாக வழக்கு குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்து தங்களது தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட்டு வந்தனர். 

பவன் குமார் குப்தா

கடைசியாக குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா கடந்த சில தினங்களுக்கு முன் குடியரசு தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்தார். ஆனால் அதனை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நிராகரித்து விட்டதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனையடுத்து நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற புதிய டெத் வாரண்ட பிறப்பிக்கும்படி டெல்லி நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்

இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திர ராணாவிடம், குற்றவாளிகளின் அனைத்து சட்டரீதியான தீர்வுகளும் முடிந்து விட்டது. இப்போது எதுவும் இல்லை. எனவே குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற புதிய தேதிய அறிவிக்குமாறு டெல்லி அரசு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து இது தொடர்பாக நாளைக்குள் (இன்று) பதில் அளிக்குமாறு குற்றவாளிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.