கருணாஸூக்கு சபாநாயகர் நோட்டீஸ்…… வெளியாகிறது கூவத்தூர் வீடியோ?

 

கருணாஸூக்கு சபாநாயகர் நோட்டீஸ்…… வெளியாகிறது கூவத்தூர் வீடியோ?

கருணாஸ் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: கருணாஸ் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரியை தரக்குறைவாக பேசியதால் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். மேலும் கூவத்தூர் தொடர்பான ரகசியத்தை வெளியிடுவேன் என பரபரப்பை பற்ற வைத்தார். இதனால் அதிமுக அரசு அவர் மீது கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பொறுப்பற்று சாதிய ரீதியாக பேசிய கருணாஸ் இனியும் எம்.எல்.ஏ பதவியில் நீடிக்க வேண்டுமா? என தன்னிடம் பலர் கேட்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இந்நிலையில் கருணாஸ், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருதாச்சலம் கலைச்செல்வன் ஆகியோருக்கு உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரில், விரைவில் நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்திருப்பதாகவும் தகுதி இழப்பு சட்டம் விதி 6-ன் படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் சபாநாயகர் தனபாலுடன் ஆலோசனை நடத்தினார்.

கருணாஸ் கைது செய்யப்பட்ட பிறகு அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவலாம் என்ற திட்டத்தில் தமிழக அரசு இருந்துள்ளது. ஆனால் தன் மீது தமிழக அரசு கை வைக்கும் பட்சத்தில் கூவத்தூர் தொடர்பான ரகசியத்தை வெளியிடும் முடிவில் கருணாஸ் இருந்ததை தெரிந்துகொண்டுதான் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயவில்லை என கூறப்படுகிறது.

மேலும் கருணாஸை இனியும் எம்.எல்.ஏ பதவியில் விட்டு வைத்தால் அவர் மேற்கொண்டு ஆட்சிக்கு குடைச்சல் கொடுத்து கொண்டிருப்பார் என நினைத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு அவரை தகுதி நீக்கம் செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் தகுதி நீக்கம் செய்யும்பட்சத்தில் கூவத்தூர் தொடர்பான ரகசியத்தை கருணாஸ் வெளியிட்டால் என்ன செய்வது என்ற குழப்பத்திலும் எடப்பாடி இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை தன்னை தகுதி நீக்கம் செய்தால் தன்னிடம் இருக்கும் கூவத்தூர் வீடியோவை வெளியிட்டு தமிழக அரசுக்கு ஷாக் கொடுக்கவும் கருணாஸ் தயார் நிலையில் இருக்கிறாராம்.