கருணாநிதி வெண்கல சிலையை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்

 

கருணாநிதி வெண்கல சிலையை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர்: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு செய்யப்பட்டிருக்கும் வெண்கல சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவை அடுத்து அவருக்கு தமிழகம் முழுவதும் திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், மெரினாவில் அமைந்திருக்கும் கலைஞரின் நினைவிடத்திலும் ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கருணாநிதிக்கு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வெண்கல சிலை வைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்த சிற்பி தீனதயாளன், 8 அடியில் கருணாநிதிக்கு சிலையை உருவாக்கி வருகிறார். இந்நிலையில் கருணாநிதிக்கு செய்து கொண்டிருக்கும் வெண்கல சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

கருணாநிதி வெண்கல சிலை

முன்னதாக, அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வெண்கல சிலை வைக்கப்பட்டது. ஆனால், அந்த சிலை ஜெயலலிதா உருவ அமைப்பு போல் இல்லவே இல்லை என நெட்டிசன்கள் உட்பட பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் கருணாநிதிக்கு செய்யப்பட்டிருக்கும் சிலையை அவர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.