கருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு

 

கருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினி, கமல் இருவருக்கும் திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினி, கமல் இருவருக்கும் திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி காலமானார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அவரின் உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.

அதனையடுத்து, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அமைந்திருக்கும் அண்ணா சிலைக்கு அருகே கருணாநிதிக்கும் சிலை அமைப்பதென அக்கட்சியின் தலைமை முடிவெடுத்தது.

அதனடிப்படையில், திருவள்ளூர் அருகே கருணாநிதியின் முழு உருவ சிலை செதுக்கும் பணிகள் நடைபெற்றது. அந்த சிலை தற்போது அண்ணா அறிவாலயம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதோடு சேர்ந்து, அண்ணா சிலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

rajini

இதனைத் தொடர்ந்து, வருகின்ற 16-ஆம் தேதி சிலை திறப்பு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்குபெற இருக்கிறார்கள். 

இந்நிலையில், அந்த விழாவில் பங்கேற்கும்படி ரஜினி, கமல் இருவருக்கும் திமுக தலைமை அழைப்பு விடுத்திருக்கிறது. கருணாநிதி உயிருடன் இருந்த போது ரஜினி, கமல் இருவருடனும் நல்ல நட்பில் இருந்தவர் என்பதால், இருவருக்கும் திமுக தலைமை அழைப்பு விடுத்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.