கரடியின் பிடியிலிருந்து தப்பிக்குமா காளை? இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? நிபுணர்கள் கணிப்பு

 

கரடியின் பிடியிலிருந்து தப்பிக்குமா காளை? இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? நிபுணர்கள் கணிப்பு

தொழில்துறை உற்பத்தி புள்ளிவிவரம், சீன அதிபர் வருகை உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாத தொழிற்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரம் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளிவருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய துறைகள் உற்பத்தி சரிவு பின்னடைவை சந்தித்து இருந்தது. இதனால் தொழிற்துறை உற்பத்தி குறித்த எதிர்பார்ப்புகள் சந்தையின் போக்கினை முடிவு செய்யும் முக்கிய காரணியாக இருக்கும்.

ஆர்.சி.இ.பி. சந்திப்பு

வரும் 10 முதல் 12ம் தேதி வரை பாங்காங்கில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு (ஆர்.சி.இ.பி.) சந்திப்பு நடைபெறுகிறது. இதில் மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 80 சதவீத பொருட்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் அல்லது நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சீன அதிபர் ஜி ஜின்பிங்

அக்டோபர் 11ம் தேதி 3 நாள் பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு வருகிறார். மாமல்லபுரத்தில் நம் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை  கிளப்பியுள்ளது. இதுதவிர இந்த வாரம் அமெரிக்காவின் வேலையில்லாதோர் புள்ளிவிவரம் உள்ளிட் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் வெளிவருகிறது. அக்டோபர் 8ம் தேதியன்று ஐரோப்பிய யூனியனின் நிர்வாக கவுன்சிலான இ.சி.பி.-ன் நிதி கொள்கை அல்லாத கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பான செய்திகளும் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பெட்ரோலிய கச்சா எண்ணெய்

மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைபாடு மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.