கமிஷன் – கலெக்‌ஷன் – கரப்ஷன் அ.தி.மு.க ஆட்சி: மு.க.ஸ்டாலின் தாக்கு

 

கமிஷன் – கலெக்‌ஷன் – கரப்ஷன் அ.தி.மு.க ஆட்சி: மு.க.ஸ்டாலின் தாக்கு

சென்னை: முதல்வர் திறந்து வைத்த பாலம் 4 மாதத்தில் விரிசல் விழுந்ததன் மூலம் கமிஷன் – கலெக்‌ஷன் – கரப்ஷன் அ.தி.மு.க ஆட்சி என்பது நிரூபணமாகியுள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதி மக்கள் பாம்பாறு உயர் மட்ட பாலத்தை கட்ட வேண்டும் என அரசுக்கு நீண்ட காலங்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்றது. கட்டுமான பணிகள் முடிவடைந்ததை அடுத்து முதல்வர் பழனிசாமி கடந்த ஜுன் மாதம் திறந்து வைத்தார்.

இந்நிலையில், முதல்வர் திறந்து வைத்து 4 மாதங்களே ஆன சூழலில் அந்த பாலத்தில் விரிசல் விழுந்துள்ளது. மேலும் பாலத்தின் மூன்று இணைப்பு சாலைகளும் பலத்த விரிசல் அடைந்துள்ளது. இதனால் முதல்வர் பழனிசாமி மீது பலருக்கும் கடுமையான அதிருப்தி எழுந்துள்ளது. 

அதுமட்டுமின்றி முதல்வரது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் நெடுஞ்சாலைத்துறை கட்டிய பாலத்தில் நான்கே மாதங்களில் இப்படி கால் மாட்டிக்கொள்ளும் அளவு விரிசல் ஏற்பட்டிருப்பதன் மூலம் இந்த ஆட்சி ஊழலில் திளைத்திருக்கும் ஆட்சி என்பது உறுதியாகிறது என எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது! கமிஷன் – கலெக்‌ஷன் – கரப்ஷன் அ.தி.மு.க ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம்! விரைவில் எடப்பாடியின் ஊழல் பாலமும் உடைந்து விழும் என பதிவிட்டு இருக்கிறார்.