‘கமல் மீது விழுந்து பிரண்டாதீர்கள்.. கொரோனோவை ஒழிக்க அக்கறையும் செயல்படுக’ முதல்வருக்கு ம.நீ.ம அறிக்கை

 

‘கமல் மீது விழுந்து பிரண்டாதீர்கள்.. கொரோனோவை ஒழிக்க அக்கறையும் செயல்படுக’ முதல்வருக்கு ம.நீ.ம அறிக்கை

கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், எதிர்கட்சிகள் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. குறிப்பாக, அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி எல்லோரின் ஆலோசனைகளையும் கேட்காததை குற்றம் சாட்டி பேசுகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் இந்த ஆட்சி மீது கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார். அவற்றிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சொன்ன பதிலுக்கு ம.நீ.மய்யம் கட்சியின் தொழிலாளர்கள் அணித் தலைவர் பொன்னுசாமி அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அந்த அறிக்கையில், ‘சேலத்தில் செய்தியாளர்களிடம் “கொரோனா பற்றி கமலுக்கு ஒன்றும் தெரியாது” என தெரிவித்துள்ள தமிழக முதல்வர் அவர்களே ஒருவருக்கு மரணத்தின் வலி தெரிய வேண்டுமென்றால் மரணித்துப் பார்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அது போல கொரோனா நோய் தொற்று குறித்து பேச மனதளவில் அவர்களின் வலியை உணர்ந்திருந்தாலே போதும்.

‘கமல் மீது விழுந்து பிரண்டாதீர்கள்.. கொரோனோவை ஒழிக்க அக்கறையும் செயல்படுக’ முதல்வருக்கு ம.நீ.ம அறிக்கை

ஆனால் அம்மையார் வழியில் ஆட்சி நடத்துவதாக மூச்சுக்கு முன்னூறுதரம் மூச்சு முட்டப் பேசும் நீங்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வலி குறித்து அறியாமல் செயல்படுவது தான் தமிழகத்தின் சாபக்கேடாகும்

பால்கனி அரசின் தலைவர் மோடி அவர்கள் மார்ச்-24ம் தேதி இரவோடு, இரவாக அறிவித்த ஊரடங்கின் முதல் நாளிலிருந்து இந்த நிமிடம் வரை மக்களின் வலிகளையும், வேதனைகளையும் மனதளவில் உணர்ந்ததால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் தொடங்கி கீழ்மட்ட நிர்வாகிகளையும், தனது இதயமான தொண்டர்களையும் பம்பரமாக சுழல விட்டு மக்கள் நலப்பணிகளை கவனித்துக் கொண்டிருப்பவர் எங்களது தலைவர்.

‘கமல் மீது விழுந்து பிரண்டாதீர்கள்.. கொரோனோவை ஒழிக்க அக்கறையும் செயல்படுக’ முதல்வருக்கு ம.நீ.ம அறிக்கை

மேலும்; கொரோனாவை தப்லிக் ஜமாஅத் பெயரால் தொடங்கி, கோயம்பேடு வழியாக பயணிக்க வைத்து ஊரடங்கிற்குள் ஊரடங்கு போட்டு, மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறந்து மக்களிடம் மிச்சம் மீதி இருந்த பொருளாதாரத்தையும் சுருட்டி, துவம்சம் செய்து விட்டு கொரோனா நோய் தொற்று விவகாரத்தில் ஒத்துழைக்கவில்லை என கூறி மக்கள் மீதே பழியைப் போட்ட நீங்கள் கொரோனா எப்போது போகும் என்பது கடவுளுக்குத் தான் தெரியும் என செய்தியாளர்களிடம் ஆரூடம் சொல்லி தப்பித்து கொள்ள முயன்றீர்கள். இதையெல்லாம் செய்ய வேண்டுமென்றால் நாடி நரம்பெல்லாம் மக்கள் மீது கொலைவெறி கொண்டவர்களால் மட்டுமே அப்படி சிந்திக்க முடியும். அது உங்களால் முடிந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி கோயம்பேடு காய்கனி சந்தையை சூனியக்கார பகுதியாக சித்தரித்தது நீண்ட காலம் எடுபடாததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தீண்டத்தகாததாக பகுதிகளாக ஊரடங்கு போட்டு, கூடவே மதுரையையும் இணைத்து கொரோனா நோய் தொற்றின் உற்பத்தி மையமாக சித்தரித்து சென்னை வாழ் மக்களையெல்லாம் அவரவர் சொந்த கிராமங்களை நோக்கி ஓட வைத்தீர்கள்.

‘கமல் மீது விழுந்து பிரண்டாதீர்கள்.. கொரோனோவை ஒழிக்க அக்கறையும் செயல்படுக’ முதல்வருக்கு ம.நீ.ம அறிக்கை

அத்துடன் விட்டீர்களா..? வந்தாரையெல்லாம் வாழ வைத்த சென்னையில் இருந்து சொந்த கிராமங்களை நோக்கி சென்றவர்களை ஊருக்குள்ளும், வீட்டுக்குள்ளும் அனுமதிக்க வேண்டாம் என தண்டோரா போட்டு புதிய உச்சம் தொட்டீர்கள். இப்படியெல்லாம் யோசிக்க உங்களைத் தவிர வேறு எவராலும் கண்டிப்பாக முடியாது.

இப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி மருத்துவ வசதிகள் இல்லாத கிராமப்புறங்களை கொரோனா நோய் தொற்று மையங்களாக மாற்றி சாதனை மேல் சாதனை படைத்தவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

எனவே முதலில் கொரோனா நோய் தொற்று விவகாரத்தில் அந்நோயை அடியோடு விரட்ட உண்மையான அக்கறையோடு செயல்படுங்கள். நான்கு மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மக்கள் ஒத்துழைப்பு தரவில்லை என அவர்கள் மீதும், ஆக்கபூர்வமாக செயல்பட்டு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீதும், தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் மீதும் விழுந்து பிராண்டி உங்கள் இயலாமையை தீர்த்துக் கொள்ள முயலாதீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.