கமல் ஒரு குழந்தை; களத்தூர் கண்ணம்மாவில் இருந்து மீளவில்லை: ஜெயக்குமார்

 

கமல் ஒரு குழந்தை; களத்தூர் கண்ணம்மாவில் இருந்து மீளவில்லை: ஜெயக்குமார்

கமல் ஒரு குழந்தை, இன்னும் அவர் களத்தூர் கண்ணம்மா நிலையிலேயே இருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்

சென்னை: கமல் ஒரு குழந்தை, இன்னும் அவர் களத்தூர் கண்ணம்மா நிலையிலேயே இருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

கஜா புயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி சென்றதையடுத்து, அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு சார்பில் ரூ.1000 கோடி மீட்பு பணிகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி சென்று பிரதமரை சந்தித்த முதல்வர் பழனிசாமி, புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.15,000 கோடி கோரியுள்ளார். அதுதவிர, புயல் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு நடத்த முதல்வரின் வலியுறுத்தலின் பேரில், தமிழகம் வந்துள்ள மத்திய குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக, புயல் பாதிப்புகளை பார்வையிட சென்ற முதல்வர் பழனிசாமி, ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது கடும் சர்ச்சையாகி உள்ளது. ஆனால், ஹெலிகாப்டரில் சென்றதால்தான் புயல் பாதிப்பு முழுமையாக தெரிந்தது என முதல்வர் விளக்கமளித்திருந்தார்.

இதனிடைய, தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்… புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு? என முதல்வரின் ஹெலிகாப்டர் ஆய்வு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் கஜா புயல் நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஒரு குழந்தை, ஏரியல் சர்வே காலம் காலமாக நடக்கும் ஒன்று தான். வான் வழியாக பார்ப்பதை விமர்சிப்பது குழந்தை தனமானது. கமல் இன்னும் களத்தூர் கண்ணம்மா நிலையிலேயே இருக்கிறார் என்றார்.