கமல் ஒரு அரைவேக்காடு: காட்டமாக அறிக்கை வெளியிட்ட திமுக!

 

கமல் ஒரு அரைவேக்காடு: காட்டமாக அறிக்கை வெளியிட்ட திமுக!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போடும் வேடம் எதுவும், அரசியலில் எடுபடப் போவதில்லை என திமுக அறிக்கை விடுத்துள்ளது.

சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு தூதுவிட்டு அது நடக்காததால் திமுக மீது கமல் புழுதிவாரி தூற்றுவது, அவரது அரசியல் கத்துக்குட்டித் தனத்தை காட்டுகிறது என திமுக அறிக்கை விடுத்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவக்கி அரசியலில் பரபரப்பாக இயங்கி வருகிறார். மக்களுடனான சந்திப்பு என்ற பெயரில் மக்களை நேரில் சந்தித்து குறைகளை அவ்வப்போது கேட்டறிந்து வருகிறார். இதனை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், திமுகவை அழுக்குப் பொதி என விமர்சித்திருந்தார். அதற்குப் பதிலடியாக, திமுக தரப்பில் இருந்து அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது

chnadra

இதுகுறித்து அக்கட்சியின் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர் விடுத்துள்ள அறிக்கையில், டிவிட்டர் கனவுகளில் மிதந்தபடி அரசியல் செய்யும் கமல்ஹாசன், திமுகவை விமர்சனம் செய்வது அரைவேக்காட்டுத்தனம். கருணாநிதியிடம் இருந்து தமிழ் கற்றேன் என்று கூறும் கமல், அத்தகைய தலைவரின் தலைமையில் தான் திமுக எதிர்நீச்சல் போட்டு நிலைத்திருக்கிறது என்பதை மறந்தது எப்படி?

திமுக மீது தீரா நஞ்சைக் கமல் கக்குவதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?  யார் தூண்டி விடுகிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ள வாகை சந்திரசேகர், கூட்டணிக்காக, காங்கிரஸ் கட்சிக்கு தூதுவிட்டு அது நடக்காததால் திமுக மீது கமல் புழுதிவாரி தூற்றுவது, அவரது அரசியல் கத்துக்குட்டித் தனத்தை காட்டுகிறது.

ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட போதிலும், அதுபற்றி வாய் திறக்காமல், அவர் இறந்த பின்பு விஸ்வரூபம் எடுத்து வீரவசனம் பேசும் கமலின் மேக்கப், மக்கள் முன் கலைந்துவிட்டது.

கட்சி தொடங்கிய ஓராண்டுக்குள் கலைந்து போய்விட்ட தனது அரசியல் அரிதாரத்தை சரி செய்ய, புது மேக்கப் கமல் போட்டிருக்கிறார்.  அந்த வேடம் இனி எடுபடப் போவதில்லை’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.