கமலை இழுக்கும் காங்கிரஸ்; கூட்டணிக்கு மீண்டும் கே.எஸ்.அழகிரி அழைப்பு

 

கமலை இழுக்கும் காங்கிரஸ்; கூட்டணிக்கு மீண்டும் கே.எஸ்.அழகிரி அழைப்பு

எங்கள் கூட்டணிக்கு கமல்ஹாசன் வந்தால் நல்லது என காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்

புதுதில்லி: எங்கள் கூட்டணிக்கு கமல்ஹாசன் வந்தால் நல்லது என காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தின் சார்பில் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றுக் கொண்ட கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி கட்சிகளுடனான உறவு, வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணியில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடந்து வரும் நிலையில், கமல்ஹாசனுக்கு வெளிப்படையாக கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே இரு தினங்களுக்கு முன்னரும் திமுக கூட்டணிக்கு கமல் வரவேண்டும் என கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், திமுக – அதிமுகவுடன் கூட்டணி கிடையாது எனவும், மக்களவை தேர்தலில் தனித்து போட்டி எனவும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். எனினும், தங்களது கைகளை சுத்தமாக வைத்திருப்பதாகவும், கூட்டணி விவகாரத்தில் யாருடன் கை குலுக்குகிறோம் என்பது குறித்தும், கையில் கரை படிந்து விடக் கூடாது என்பதிலும் கவனமாக உள்ளதாகவும் கமல் தெரிவித்துள்ளார். எனவே, அவரும் கூட்டணி அமைக்கு விருப்பமான மனநிலையிலேயே இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே, காங்கிரஸ் தலைவர் ராகுலை கமல் தில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, காங்கிரஸ் கட்சியுடன் கமல் கூட்டணி அமைப்பார் என கூறப்பட்டது. மேலும், திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும் என்ற அவரது கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகவும் மாறியது என்பது நினைவிருக்கலாம்.

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்தை இணைக்க காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், திமுக தலைமையோ அதனை விரும்புமா என்பது தெரியவில்லை. ஒருவேளை கூட்டணி இறுதியாகும் பட்சத்தில், குறைந்தது 20 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் திமுக, காங்கிரஸ் கட்சியின் ஒரு தொகுதியை குறைத்து கமலுக்கு 2 முதல் 3 சீட்டுகள் வரை வழங்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆனால், அதனை கமல் ஏற்பாரா என்பது சந்தேகமே..