கபடி நம்ம ரத்தத்துல ஊறுனது; தமிழ் தலைவாஸின் தூதரானார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

 

கபடி நம்ம ரத்தத்துல ஊறுனது; தமிழ் தலைவாஸின் தூதரானார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

ப்ரோ கபடி 6-வது சீசனுக்கான தமிழ் தலைவாஸ் அணியின் தூதுவராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை: ப்ரோ கபடி 6-வது சீசனுக்கான தமிழ் தலைவாஸ் அணியின் தூதுவராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ப்ரோ கபடி லீக் தொடங்கப்பட்டது. முதலில், டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், பாட்னா, புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய எட்டு அணிகள் இதில் பங்கேற்றன. அடுத்தடுத்து, இப்போட்டிகளுக்கு வரவேற்பு கிடைக்கவே, தமிழ்நாடு, குஜராத், ஹரியானா, உத்தரப்பிரதேச அணிகளும் இந்த போட்டியில் களம் கண்டன.

மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற ப்ரோ கபடியின் 5-வது சீசன் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதையடுத்து, ப்ரோ கபடி 6-வது சீசனுக்கான ஏலம் கடந்த  மே மாதம் நடைபெற்றது.  இதில் 58 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 422  வீரர்கள் கலந்து கொண்டனர்.  ஏலத்தில் 12  அணிகளும் குறிப்பிட்ட வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டனர்.

கடந்த 2017–ஆம் ஆண்டு ப்ரோ கபடி சீசனில் தமிழக அணி அறிமுகமானது. ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் பிரசாத், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், தெலுங்கு திரையுலகை சார்ந்த அல்லு அர்ஜுன், சிரஞ்சிவி மகன் ராம் சரண் மற்றும் சினிமா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஆகியோர் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளராக உள்ளனர். இந்திய அணியின் கேப்டன் அஜய் தாகூர், அமித் ஹூடா, சி அருண் மற்றும் டி பிரதீப் ஆகியோரை ஏலத்தின் போது தமிழ் தலைவாஸ் அணி தக்க வைத்துக் கொண்டது. கடந்த ஆண்டு அனுபவமிக்க வீரர்கள் இல்லாமல் தடுமாறிய தமிழ் தலைவாஸ் அணிக்கு பலம் சேர்க்க, இந்த முறை நல்ல அனுபவமிக்க வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், கபடியை தமிழ் மண்ணில் இன்னும் அதிகமாக பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு விஷயங்களை தமிழ் தலைவாஸ் அணி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த சீசனுக்கான தமிழ் தலைவாஸ் அணியின் தூதுவராக நடிகர் விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கமல்ஹாசன் தமிழ் தலைவாஸ் அணியின் தூதராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.