கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம்: பொதுமக்கள் அவதி

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம்: பொதுமக்கள் அவதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இருமுடிக் கட்டி சபரிமலை செல்ல முயன்ற இந்து ஐக்கிய வேதி தலைவர் சசிகலா டீச்சர் மற்றும் பா.ஜ.க. கேரள மாநில பொதுச்செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து, தினமும் ஒரு முக்கிய பிரமுகரை சபரிமலைக்கு அனுப்பும் திட்டத்தை பாஜக கையில் எடுத்தது.

அதன்படி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலை சென்றார். ஆனால், அவரை தடுத்து நிறுத்திய கேரள காவல்துறை, மத்திய அமைச்சர் என்ற முறையில் பொன்.ராதாகிருஷ்ணன் காரை மட்டும் பம்பைக்கு அனுப்பலாம் எனவும், அவருடன் சென்றவர்களை அனுமதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. 

இதையடுத்து, கேரள மாநில அரசு பேருந்தில் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பொன் ராதாகிருஷ்ணன் சென்று ஐயப்பனை வழிபட்டு திரும்பினார். மேலும், தான் இதுவரை கண்டிராத அளவுக்கு பக்தர்களிடம் கெடுபிடி காட்டுகிறார்கள் எனவும் அவர் வேதனை தெரிவித்திருந்தார்.

மத்திய அமைச்சரை கேரள காவல்துறை தடுத்து நிறுத்தியதற்கு பாஜக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணன் அவமதித்த காவல்துறையை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், கன்னியாகுமரியிலிருந்து கேரளா செல்லும் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.