கனமழையால் கர்நாடக மாநிலத்தில் வாக்குப்பதிவு பாதிப்பு!

 

கனமழையால் கர்நாடக மாநிலத்தில் வாக்குப்பதிவு பாதிப்பு!

மதியம் முதல் மாநிலம் முழுவதும் மழை பொழிய ஆரம்பித்தது. இதனால், வாக்குச்சாவடி மையங்களுக்கு வருவதற்கு வாக்காளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது

பெங்களூரு: கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், 14 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 115 தொகுதிகளில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்தது.

கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை,அங்குள்ள 28 மக்களவை தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. கல்புர்கி, ஷிமோகா உள்பட 14 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

karnataka rain

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். ஆனால், மதியம் முதல் மாநிலம் முழுவதும் மழை பொழிய ஆரம்பித்தது. இதனால், வாக்குச்சாவடி மையங்களுக்கு வருவதற்கு வாக்காளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. கனமழையால் பல இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டது. உடுப்பி, ஷிவமோகா, உத்தர்கன்னடா பகுதிகள் மழையால் பாதிக்கப்பட்டன.

சூறைக்காற்று வீசியதால், ஷிவமோகா தொகுதியில் உள்ள தளகுப்பா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 272-ன் அருகே மின்கம்பம் முறிந்து விழுந்ததில் சுமார் அரை மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயமேற்படவில்லை. இருப்பினும், கீழே விழுந்த கம்பத்தில் இருந்து மின்சாரம் பாயக் கூடும் என்பதால் பெரும்பாலானவர்கள் அங்கு வருவதை தவிர்த்தனர்.

karnataka rain

மாலை ஐந்து மணி நிலவரப்படி ஷிவமோகாவில் 68.39 சதவீதமும், உத்தர் கன்னடாவில் 65.58 சதவீத வாக்குகளும் பதிவாகின. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. எனினும், அதற்கு முன்னரே வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகளவில் பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழையின் காரணமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயில் கொளுத்தி வந்த கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இடி, மின்னலுடன் சூறைக்காற்றும் வீசுவதால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. கனமழைக்கு சிக்கி அம்மாநிலத்தில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.