கத்தி திரைப்பட கதைக்கு நீதி கேட்ட இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி!

 

கத்தி திரைப்பட கதைக்கு நீதி கேட்ட இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி!

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படத்தின் கதைக்கு உரிமை கோரி உண்ணாவிரதம் இருந்த இயக்குநர் அன்பு ராஜசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படத்தின் கதைக்கு உரிமை கோரி உண்ணாவிரதம் இருந்த இயக்குநர் அன்பு ராஜசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி. இப்படத்தின் கதை தன்னுடையது என இயக்குநர் அன்பு ராஜசேகர் உரிமை கோரியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளவங்காடு கிராமத்தைச் சேர்ந்த அன்பு ராஜசேகர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உறவினர் ஆவார். விவசாயத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய ‘தாகபூமி’ என்னும் குறும்படத்தின் கதையைத் திருடி கத்தி திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியதாக இவர் தொடுத்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் இன்றும் நிலுவையில் உள்ளது.

ஆனால், தனக்கான நீதி கிடைக்கவில்லை என்றும், நீதி கிடைக்கும் வரை குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அன்பு ராஜசேகர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, கடந்த மாதம் 31-ஆம் தேதியிலிருந்து தனது குடும்பத்தினருடன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்த அவருக்கு இன்று காலை மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அன்பு ராஜசேகர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.