கணிப்புகளை பொய்யாக்கிய வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவு

 

கணிப்புகளை பொய்யாக்கிய வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவு

தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடைவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை: தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடைவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடல் தென்னிந்திய பகுதி மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் காற்றின் போக்கு மற்றும் ஈரப்பதத்தில் மாறுபாடுகள் ஏற்பட்ட காரணத்தால் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு நிலவிவந்த சாதகமான சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டு தாமதமாகவே தொடங்கியது.

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், இயல்பை விட 24 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை காலத்தில் 4 புயல்கள் உருவாகின. அவற்றில் ஈரப்பதம் குறைவாக இருந்ததால் மழை இல்லை. கஜா புயல் மட்டுமே மழைக்கு சாதகமாக இருந்தது. கஜா தவிர்த்து, மற்ற 3 புயல்கள் திசைமாறி நகர்ந்து சென்று விட்டதால் மழை இல்லை.

பொதுவாக ‘எல்நினோ’ உருவானால் தான் மழை பெய்யும். அது உருவாகாமல் தள்ளி போனதாலும்,  வானிலை நிகழ்வுகள் சாதகம் இல்லாததும் வடகிழக்கு பருவமழை குறைவுக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. நெல்லையில் மட்டும்தான் இயல்பைவிட 11 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. மற்ற மாவட்டங்களில் இயல்பை விட குறைவான அளவே பெய்துள்ளது.

இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகாவில் இன்றுடன் முடிவடைவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை, அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்த பட்சம் 20 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.