கணிப்புகளை தவிடுபொடியாக்கிய எச்.சி.எல். டெக்னாலஜிஸ்… லாபம் மட்டும் ரூ.3,154 கோடியாம்….

 

கணிப்புகளை தவிடுபொடியாக்கிய எச்.சி.எல். டெக்னாலஜிஸ்… லாபம் மட்டும் ரூ.3,154 கோடியாம்….

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,154 கோடியாக உயர்ந்துள்ளது.

நாட்டின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது எச்.சி.எல். டெக்னாலஜிஸ். இந்நிறுவனம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,154 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 22.8 சதவீதம் அதிகமாகும். 2019 மார்ச் காலாண்டில்  எச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஒட்டு மொத்த நிகர லாபமாக ரூ.2,568  கோடி ஈட்டியிருந்தது.

எச்.சி.எல். டெக்னாலஜிஸ்

கடந்த மார்ச் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த நிகர லாபம் ரூ.3,025 கோடி அளவுக்கே இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்து இருந்தனர். ஆனால் ஆய்வாளர்களின் மதிப்பீடுகளுக்கு மாறாக எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நல்ல லாபம் ஈட்டியுள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருவாய் 16.3 சதவீதம் உயர்ந்து ரூ.18,950 கோடியாக உயர்ந்துள்ளது.

எச்.சி.எல். டெக்னாலஜிஸ்

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சி.விஜயகுமார் கூறுகையில், கடந்த ஜனவரி மாத இறுதியில் தனது கொரோனா வைரஸ் வர்த்தக தொடர்ச்சி திட்டத்தை நிறுவனம் செயல்படுத்தியது. மேலும் தற்போது நிறுவன பணியாளர்களில் 96 சதவீதம் வீடுகளிலிருந்தும், 2.5 சதவீத பணியாளர்கள் எச்.சி.எல். அலுவலகம் அல்லது வாடிக்கையாளர்களின் இடங்களிலிருந்து பணிபுரிவதாகவும் தெரிவித்தார். எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் புதிதாக 1,250 பேரை வேலைக்கு எடுத்துள்ளது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1.50 லட்சமாக உள்ளது.