கணிப்புகளை தகர்த்து எறிந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்! லாபம் மட்டுமே ரூ.10 ஆயிரம் கோடிங்கோ!

 

கணிப்புகளை தகர்த்து எறிந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்! லாபம் மட்டுமே ரூ.10 ஆயிரம் கோடிங்கோ!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் மட்டும் ஒட்டு மொத்த அளவில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் பார்த்துள்ளது. நிதிநிலை முடிவுகள் சுமாராகவே இருக்கும் என்ற சிலரின் கணிப்புகளை அந்த நிறுவனம் தற்போது தகர்த்து எறிந்துள்ளது.

இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கச்சா எண்ணெய் முதல் தொலைத்தொடர்பு என பல துறைகளில் கொடி கட்டி பறக்கிறது. பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் சந்தை மதிப்பு அதிகம் கொண்ட நிறுவனமாகவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திகழ்கிறது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.10,104 கோடி ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலாண்டை காட்டிலும் 6.8 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.9,459 கோடி மட்டுமே லாபம் பார்த்து இருந்தது.

ஜியோ

கடந்த ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மொத்த லாபத்தில், எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல்ஸ் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி வர்த்தகம் வாயிலான தனிப்பட்ட லாபம் மட்டும் ரூ.9,036 கோடியாகும். இந்திய தொலைத்தொடர்பு துறையை புரட்டி போட்ட ஜியோவுக்கு அந்த காலாண்டில் ரூ.891 கோடி லாபம் கிடைத்தது.

கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.1,61,349 கோடியாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1,33,069 கோடியாக இருந்தது.