கணவர் பர்சில் கை வைத்த மனைவி; அடிப்பாவி…வேட்புமனு தாக்கலின் போது விழிபிதுங்கிய சுயேட்சை!

 

கணவர் பர்சில் கை வைத்த மனைவி; அடிப்பாவி…வேட்புமனு தாக்கலின் போது விழிபிதுங்கிய சுயேட்சை!

பழக்க தோசத்தில் கணவரிடம் இருந்த பணத்தை மனைவி எடுத்ததால் வேட்புமனுத் தாக்கலின் போது பணமில்லாமல் கணவர் விழிபிதுங்கிய சம்பவம் விழுப்புரத்தில் நிகழ்ந்துள்ளது

விழுப்புரம்: பழக்க தோசத்தில் கணவரிடம் இருந்த பணத்தை மனைவி எடுத்ததால் வேட்புமனுத் தாக்கலின் போது பணமில்லாமல் கணவர் விழிபிதுங்கிய சம்பவம் விழுப்புரத்தில் நிகழ்ந்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழிகத்தில் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், தமிழகத்தை பொறுத்தவரை 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இதனுடன் நடைபெறவுள்ளது.

பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து, தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கியுள்ளது. தேர்தலையொட்டி கடந்த 19-ம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. வேட்புமனு தாக்கல் செய்ய 26-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில், பழக்க தோசத்தில் கணவரிடம் இருந்த பணத்தை மனைவி எடுத்ததால் வேட்புமனுத் தாக்கலின் போது பணமில்லாமல் கணவர் விழிபிதுங்கிய சுவாரஸ்ய சம்பவம் விழுப்புரத்தில் நிகழ்ந்துள்ளது.

உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த கேசவன். இவரது மகன் அரசன் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் (தனி) தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு 811 வாக்குகளை பெற்றவர்.

அந்த வகையில், நடப்பாண்டு தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட விரும்பிய அவர், வேட்புமனு தாக்கல் செய்ய விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் வந்தார். வேட்புமனுவுடன் முன்வைப்புத் தொகை ரூ.12,500 செலுத்துவதற்காக பணத்தை எடுத்து எண்ணிய அரசனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பணத்தில் ரூ.500 குறைவாக இருந்ததை கண்டு அதிர்சியடைந்த அரசன், தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு இது பற்றி கேட்டுள்ளார்.

அதற்கு அவரது மனைவி ராஜாம்பாள், பங்குனி உத்திர செலவுக்காக ரூ.500 எடுத்ததாக கூலாக பதிலளித்துள்ளார். இதையடுத்து, யாரிடமாவது மீதி பணத்தை பெற்றுக் கொண்டு மீண்டும் வருவதாக கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டார் அரசன்.

பொதுவாக வீடுகளில் கணவருக்கு தெரியாமல் பெண்கள் “சிறுவாடு” என சொல்லப்படும் சிறுசேமிப்புகளை சேர்த்து வைப்பது வழக்கம். அதற்காக, கணவரின் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை அவருக்கே தெரியாமல் சிறிய அளவில் அவ்வப்போது எடுத்து அதனை சேமித்து வைத்து அத்தியாவசிய செலவுகளை செய்வர்.

ஆனால், சில சமயங்களில் சுயேச்சை வேட்பாளர் அரசனின் நிலை போன்றும் அவை முடிந்து விடும் என்பதால், வீடுகளில் இருந்து புறப்படும் முன்னர் பணத்தை மீண்டும் ஒருமுறை எண்ணிக் கொள்வது சாலச்சிறந்தது கணவர்களே!! அதேபோல் அவசியமானவற்றிற்கு வைத்திருக்கும் பணத்தை சொல்லி விட்டு மனைவிகள் சுடுவது நலம்!!!