கணவர் இறந்த சில மாதத்தில் அரசியல் ஆசை: சுமலதா குறித்து கர்நாடக முதல்வரின் சகோதரர் சர்ச்சை கருத்து

 

கணவர் இறந்த சில மாதத்தில் அரசியல் ஆசை: சுமலதா குறித்து கர்நாடக முதல்வரின் சகோதரர் சர்ச்சை கருத்து

மாண்டியா தொகுதியில் தனித்து போட்டியிடும் சுமலதாவை கர்நாடக முதல்வரின் சகோதரர் ரேவண்ணா விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா: மாண்டியா தொகுதியில் தனித்து போட்டியிடும் சுமலதாவை கர்நாடக முதல்வரின் சகோதரர் ரேவண்ணா விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், கன்னடம் என 100 படங்களுக்கு மேல் நடித்தவர் சுமலதா, கன்னட நடிகர் அம்பரீஷை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். அம்பரீஷ் காங்கிரஸ் கட்சியில் இயங்கி வந்தவர், மாண்டியா மக்களவை தொகுதியில் நின்று 3 முறை எம்பி ஆனவர். அவர் இறந்துவிட்டதால், அந்த இடத்தில் சுமலதா நிற்க வேண்டும் என்பது அம்பரீஷ் தரப்பினர் விருப்பம். ஆனால் காங்கிரஸ் கட்சி சுமலதா நிற்பதை ஏற்கவில்லை. இதனால் அவர் சுயேட்சையாக நிற்க முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சுமலதா அரசியலுக்கு வருவதை கர்நாடக முதல்வரின் சகோதரர் ரேவண்ணா விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுமலதா போட்டியிடும் தொகுதியில்தான் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் நிற்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த கர்நாடக முதல்வரின் சகோதரர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா, சுமலதா கணவர் இறந்து சில மாதங்களே ஆகிறது. அவருக்கு அரசியல் ஆசையை பாருங்கள், சினிமாவில் நடிப்பது போலவே அரசியலிலும் நடிக்கிறார் என கூறினார். 

இதற்கு மன்னிப்பு கேட்கக்கோரி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரேவண்ணா மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். சர்ச்சையில் சிக்குவது ரேவண்ணாவுக்கு புதிதல்ல, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறேன் என பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசி வைரலானவர் இவர்தான்.