கணவரோடு துணை நிற்பேன்: பிரியங்கா காந்தி உறுதி

 

கணவரோடு துணை நிற்பேன்: பிரியங்கா காந்தி உறுதி

சட்டவிரோத பண பரிமாற்ற புகாரில் சிக்கியுள்ள கணவர் ராபர்ட் வதேராவுக்கு எப்போதும் துணை நிற்பேன் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்

புதுதில்லி: சட்டவிரோத பண பரிமாற்ற புகாரில் சிக்கியுள்ள கணவர் ராபர்ட் வதேராவுக்கு எப்போதும் துணை நிற்பேன் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

லண்டனில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் உள்ளிட்ட  சொத்துகள் வாங்கிய விவகாரத்தில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக, ராபர்ட் வதேரா மற்றும் மனோஜ் அரோரா மீது, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, தில்லி நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா முன்ஜாமின் பெற்றார். அந்த வழக்கு விசாரணையின் போது, வருகிற 16-ம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்ததுடன், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். ஆஜராக கூறினால் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

 இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முதன்முறையாக தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜரானார். அவருடன் அவரது மனைவி பிரியங்கா காந்தியும் வந்திருந்தார். சட்டவிரோத பண பரிமாற்ற விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சில கேள்விகளை கேட்டதாகவும், அதற்கு வதேரா பதில் அளித்தாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவருடைய மனைவி பிரியங்கா காந்தி, தன்னுடையே கணவருக்கு எப்போதும் துணை நிற்பேன் என்றார்.