கணக்கு ஆசிரியர் இல்லாததால் 2 ஆண்டுகளாக பாடமே எடுக்கப்படாத காஷ்மீர் அரசு பள்ளிக்கூடம்! பரிதவிக்கும் மாணவர்கள்

 

கணக்கு ஆசிரியர் இல்லாததால் 2 ஆண்டுகளாக பாடமே எடுக்கப்படாத காஷ்மீர் அரசு பள்ளிக்கூடம்! பரிதவிக்கும் மாணவர்கள்

காஷ்மீரில் அரசு பள்ளியில் கணக்கு ஆசிரியர் இல்லாததால் 2 ஆண்டுகளாக அந்த பாடமே எடுக்கவில்லை. அதனால் தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கவர்னர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என அந்த பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஷ்மீரின் உதாம்பூர் மாவட்டத்தின் அரசு பள்ளி ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளாக கணக்கு ஆசிரியர் பணியிடம் காலியாகவே உள்ளதாக தெரிகிறது. இதனால் அந்த பள்ளியில் மாணவர்களுக்கு இதுவரை கணக்கு பாடம் மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கப்படவில்லை. மேலும் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் வசதி இல்லாதவர்கள். அதனால் அவர்களால் பணம் செலுத்தி டியூசன் வகுப்புகளுக்கு சென்று படிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இதனையடுத்து இந்த விவகாரத்தில் கவர்னர் சத்ய பால் மாலிக் உடனடியாக தலையிட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்ய பால் மாலிக்

அந்த பள்ளியின் மாணவர் ஆலிம் இது குறித்து கூறுகையில், 64 மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.  நாங்கள் ஏழைகள் மற்றும் டியூசன்களுக்கு எங்களால் பணம் செலவழிக்க முடியாது. ஆகையால் எங்க பள்ளிக்கு கணித ஆசிரியர் நியமிக்க கவர்னரிடம் கோரிக்கை விடுக்கிறேன். வரும் ஆண்டுகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளோம். அதற்கு நாங்கள் எப்படி படிப்போம்? என தெரிவித்தார்.

அந்த பள்ளியின் மற்றொரு மாணவர் ரிங்கு சிங் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக நான் படிக்கும் பள்ளியில் மாணவர்களுக்கு கணக்கு பாடம் எடுக்கப்படவில்லை. ஆகையால் கவர்னர் மாலிக் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என தெரிவித்தார்.

காஷ்மீர் அரசு பள்ளி

அதேசமயம் அந்த பள்ளியின் பொறுப்பாளர் விஜய் குமார் மாணவர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பள்ளியின் கணக்கு ஆசிரியர் தேர்தல் பணிக்கு சென்றார். தேர்தல் பணி முடிவடைந்த பிறகு வேறு பள்ளியில் அவர் நியமனம் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் அவர் இந்த பள்ளியில் சேர்ந்துள்ளார் என தெரிவித்தார்.