கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சிபிஐ இயக்குனர் : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

 

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சிபிஐ இயக்குனர் : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

சிபிஐ இயக்குனரின் கட்டாய விடுப்புக்கு எதிரான மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளது

டெல்லி: சிபிஐ இயக்குனரின் கட்டாய விடுப்புக்கு எதிரான மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதனிடையே, தொழிலதிபர் மொயின் குரேஷி தொடர்பான ஒரு வழக்கில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேபோல், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக ராகேஷ் அஸ்தானாவும் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் மிகப் பெரிய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் உயர்பதவி வகிக்கும் இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பனிப்போரில் ஈடுபட்ட சிபிஐ அதிகாரிகள் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானாவை பிரதமர் மோடி நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியிடம் இருவரும் மாறிமாறி குற்றச்சாட்டுக்களை முன் வைத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர்கள் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். மேலும், சிபிஐயின் தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர் ராவை மத்திய அரசு நியமித்தது.

தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கவும் அவர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று மேற்கொள்ளவுள்ளது.