கட்சியின் அழிவை தடுக்கவேண்டுமானால் சுயபரிசோதனை அவசியம்- சிந்தியா எச்சரிக்கை

 

கட்சியின் அழிவை தடுக்கவேண்டுமானால் சுயபரிசோதனை அவசியம்- சிந்தியா எச்சரிக்கை

காங்கிரஸ் கட்சியின் அழிவை தடுக்க வேண்டுமானால் உடனடியாக சுயபரிசோதனை அல்லது வேறு ஏதாவது உடனடியாக செய்ய வேண்டும் என அந்த கட்சியை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா எச்சரிக்கை செய்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்ததை காட்டிலும் மிகவும் குறைந்த இடங்களை கிடைத்தது. இதனால் நொந்து போன ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் கடும் இழுபறி நிலவி வந்தது. புதிய தலைவரை ஒருமனதாக தேர்ந்தெடுக்க முடியாத சூழ்நிலையில் வேறுவழியின்றி சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்று கொண்டார். 

சல்மான் குர்ஷித்

இந்நிலையில் அந்த கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பேட்டி ஒன்றில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். ஆனால் அது குறித்து ஆய்வு செய்ய நாங்கள் ஒன்று சேரவில்லை. எங்கள் தலைவர் வெளியேறியதே எங்கள் பெரும் பிரச்னை. அது தலைமையில் வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது என கூறியிருந்தார். சல்மான் குர்ஷித்தின் பேட்டி காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

ஜோதிராதித்ய சிந்தியா

இது தொடர்பாக செய்தியாளர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைகளில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவிடம் கேட்டனர். அதற்கு அவர், மற்றவர்களின் கருத்துக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். ஆனால் காங்கிரசுக்கு சுயபரிசோதனை தேவை என்பது உண்மைதான். கட்சியின் நிலைமை மதிப்பீடு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும். அதுதான் காலத்தின் தேவை என பதில் அளித்தார். ஆக, காங்கிரஸ் தலைவர்களே அந்த கட்சியின் செயல்முறையில் மாற்றம் தேவை என வெளிப்படையாக சொல்ல தொடங்கி விட்டதால், கட்சிக்கு புத்துயிர் கொடுக்க அதிரடி நடவடிக்கைகளை காங்கிரஸ் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.