கட்சிகளை கடந்தது எங்களின் உறவு: கமலை சந்தித்த பின் அமீர் பேட்டி

 

கட்சிகளை கடந்தது எங்களின் உறவு: கமலை சந்தித்த பின் அமீர் பேட்டி

மக்களவை மற்றும் இடைத்தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் அமீர் கலந்துகொண்டார்.

சென்னை: மக்களவை மற்றும் இடைத்தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் அமீர் கலந்துகொண்டார். 

நடைபெற இருக்கும் மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களை மக்கள் நீதி மய்யம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் கடந்த 22ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநரும், அரசியல் செயற்பாட்டாளருமான அமீர் கலந்து கொண்டார். கூட்டம் நிறைவடைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். சீமானின் நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். ஆனால் அந்த கட்சியின் மேடையில் ஏற மாட்டேன். 

அதுபோலத்தான் கமலஹாசனுடைய உறவு என்பது. அந்த உறவில் பிரிவு இருக்காது. மக்களுக்கான போராட்டத்தில் எப்படி பங்கேற்றீர்கள். மக்களை எப்படி அணுகுகிறீர்கள். எப்படி எதிர்கொள்கிறீர்கள். மக்கள் என்ன நினைக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்தை மக்கள் எப்படி நினைக்கிறார்கள். மக்கள் பார்வையில் எப்படி மக்கள் நீதி மய்யம் இருக்கிறது என்பது பற்றி அறியத்தான் உயரிய நோக்கத்துடன் அழைத்திருந்தார். நானும் என்னுடைய கருத்தையும், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற கருத்தையும் எந்த ஒளிவு மறைவு இல்லாமல் பேசினேன். 

2009ல் ஈழப் பிரச்சனை உச்சக்கட்டத்தில் இருக்கும்போது அன்றைக்கு துணை முதல் அமைச்சராக இருந்த ஸ்டாலின் ராயபுரத்தில் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினார். அந்த மனித சங்கிலி போராட்டத்தில் இயக்குநர் சங்கத்தையும் மீறி கலந்து கொண்டேன். என்னுடைய நோக்கம் அரசியல் கிடையாது. எப்படியாவது அந்த போரை நிறுத்த வேண்டும் என்பதுதான். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் மக்களின் பிரச்சனைகளை முன்னெடுத்து வரும்போது அவர்களுடன் நிற்பேன். எனக்கும் கமலுக்கும் இடையேயான உறவு என்பது, கட்சிகளை கடந்தது” என தெரிவித்துள்ளார்.