கடைசி நாளில் 49 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல்….

 

கடைசி நாளில் 49 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல்….

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான கடந்த சனிக்கிழமையன்று 49 லட்சம் பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாக வரித் துறை தகவல் தெரிவித்துள்ளது.

2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல்  செய்வதற்கான அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் உடையவர்கள் அனைவரும் கடந்த ஜூலை 31ம் தேதிக்குள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் மேலும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் காலஅவகாசம் நீடிக்கப்பட்டது. இதன்படி வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவற்கான கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

வருமான வரி கணக்கு தாக்கல்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான கடந்த  சனிக்கிழமையன்று (31ம் தேதி) மட்டும் 49 லட்சம் பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து கடந்த சனிக்கிழமை வரை மொத்தம் 5.65 கோடி பேர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. 2018 ஆகஸ்ட் 31ம் வரை 5.4 கோடி பேர் மட்டுமே வருமான வரி கணக்கை தாக்கல்  செய்து இருந்தனர்.

வரி ரிட்டன்

கடந்த 2018-19ம் நிதியாண்டின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்த 5.65 கோடி பேரில் 25 சதவீதம் பேர் கடைசி 5 நாட்களில்தான் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று ஒரு நொடிக்கு 196 பேர் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்த போதும் தொழில்நுட்பம் அல்லது சர்வர் ஹேங் ஆகாமல் இருந்தது என வரித் துறை தகவல் தெரிவித்தது.