கடனை காரணம் காட்டி கஜா இழப்பீட்டை வங்கிகள் பறிப்பு: ராமதாஸ் கண்டனம்

 

கடனை காரணம் காட்டி கஜா இழப்பீட்டை வங்கிகள் பறிப்பு: ராமதாஸ் கண்டனம்

கடனைக் காரணம் காட்டி அப்பாவி மக்களுக்கு வரும் கஜா இழப்பீட்டை பறிக்கும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: கடனைக் காரணம் காட்டி அப்பாவி மக்களுக்கு வரும் கஜா இழப்பீட்டை பறிக்கும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட நிவாரணத் தொகையை, காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள பொதுத்துறை வங்கிகள் முடக்கி வைத்துள்ளன. கஜா புயலால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களிடம் வங்கிகள் கெடுபிடி காட்டுவது கண்டிக்கத்தக்கது.

நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களை கஜா புயல் சிதைத்திருக்கிறது.  வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்த மக்கள், வாழ்வதற்கு வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டு  இருக்கிறார்கள். சேதமடைந்த வீடுகளை சரி செய்வதற்கே லட்சக்கணக்கில் செலவாகும் என்று கூறப்படும் நிலையில், தமிழக அரசு சார்பில் ரூ.10,000 மட்டுமே இழப்பீடாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படியே அந்தத் தொகை பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஏற்கனவே பயிர்க்கடன் மற்றும் கல்விக்கடன் வாங்கிய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ள இந்தத் தொகையை வங்கி நிர்வாகங்கள் முடக்கி வைத்துள்ளன. பயிர்க்கடன்,  கல்விக்கடன் ஆகியவற்றை செலுத்ததாதால், நிலுவைத் தொகை அதிகரித்து விட்டதாகவும், அதை செலுத்தாத வரையில் தமிழக அரசின் சார்பில் செலுத்தப்பட்ட ரூ.10,000 பணத்தை எடுக்க அனுமதிக்க முடியாது என்று காவிரிப் பாசன மாவட்டங்களில் உள்ள சில பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகள்  கூறியுள்ளனர். சில வங்கிக் கிளைகளில் தமிழக அரசின் சார்பில் செலுத்தப்பட்ட நிவாரணத் தொகை, பாதிக்கப்பட்ட மக்கள் வாங்கியிருந்த பயிர்க்கடன் – கல்விக்கடன் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் புதுப்பள்ளி, விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இந்தப் பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு வங்கி அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் இச்சிக்கல் தீர்வதாக தெரியவில்லை. பொதுத்துறை வங்கிகள் வேலைநிறுத்தம் மற்றும் விடுமுறை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு செயல்படாது என்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் கையில் பணமின்றி, அடுத்த வேலை உணவுக்குக் கூட வழியின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை நரகமாக கழிகிறது.

அரசின் சார்பில் வழங்கப்படும் உதவியைக் கொண்டு தான் சேதமடைந்த வீட்டின் ஒரு பகுதியையாவது சீரமைத்து வெயில் மற்றும் மழையிலிருந்து தற்காலிகமாகவாவது தங்களைக் காத்துக் கொள்ளலாம் என்று மக்கள் நினைத்திருந்தனர். ஆனால், வங்கிகளின் கெடுபிடியால் எதையும் செய்ய முடியாமல், கஜா புயல் தாக்கிய போது எந்த நிலையில் இருந்தார்களோ, அதே நிலையில் தான் இப்போதும் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் உள்ளனர். அரசு வழங்கிய அரைகுறை உதவியும் அவர்களுக்கு பயனளிக்கவில்லை.

விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனாக இருந்தாலும், மாணவர்களுக்காக பெறப்பட்ட கல்விக் கடனாக  இருந்தாலும், அவை அரசால் தள்ளுபடி செய்யப்படாத பட்சத்தில் அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் திரும்பச் செலுத்த வேண்டும் என்பதில் யாருக்கும், எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், புயலால்  அனைத்தையும் இழந்து விட்டு, ஒருவேளை உணவுக்கு மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு கிடைத்த பணத்தை வங்கிகள் பறிக்கத் துடிப்பது இரக்கமற்ற கொடிய செயலாகும். கந்துவட்டிக் காரர்கள் கூட இந்த அளவுக்கு மனிதாபிமானமில்லாமல் இருக்க மாட்டார்கள். எரியும் வீட்டில் பிடுங்கியவரை லாபம் என்பது எவ்வளவு கொடூரமான அணுகுமுறையோ, அதே அளவு கொடிய அணுகுமுறை தான் இதுவும்.

எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு உதவியாக வழங்கப்பட்ட தொகை அவர்களிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சற்றும் இரக்கமின்றி,  அப்பாவி மக்களின் பணத்தை தர மறுத்த வங்கி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.