கடனுக்கான வட்டியை குறைத்த பாரத ஸ்டேட் வங்கி… மூத்த குடிமக்களுக்கான சிறப்பு டெபாசிட் திட்டம் அறிமுகம்….

 

கடனுக்கான வட்டியை குறைத்த பாரத ஸ்டேட் வங்கி… மூத்த குடிமக்களுக்கான சிறப்பு டெபாசிட் திட்டம் அறிமுகம்….

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) எம்.சி.எல்.ஆர். வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் அந்த வங்கி வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி செலவினம் சிறிது குறையும்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., மார்ஜினல் காஸ்ட்  அடிப்படையிலான கடனுக்கான வட்டி விகிதத்தை (எம்.சி.எல்.ஆர்.) 0.15 சதவீதம் குறைத்துள்ளது. அதாவது ஒரு வருட  மார்ஜினல் காஸ்ட்  அடிப்படையிலான கடனுக்கான வட்டி விகிதம் 7.40 சதவீதத்திலிருந்து 7.25 சதவீதமாக குறையும் இந்த புதிய வட்டி விகிதம் இம்மாதம் 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எஸ்.பி.ஐ.-ன் கடனுக்கான வட்டி குறைப்பு நடவடிக்கையால் அந்த வங்கி வாடிக்கையாளர்களின் மாதந்திர வட்டி செலவினம் குறையும்.

கடனுக்கான வட்டி குறைப்பு

கடனுக்கான வட்டியை குறைத்தது போல், டெபாசிட் வட்டி விகிதத்தையும் எஸ்.பி.ஐ. குறைத்துள்ளது. 3 ஆண்டுகள் வரையிலான ரீடெயில் டேர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் குறைத்துள்ளது. இந்த புதிய டெபாசிட் வட்டி விகிதம் இம்மாதம் 12ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த வட்டி குறைப்பு நடவடிக்கையால் அந்த வங்கி டெபாசிட்தாரர்களுக்கு வட்டி வருவாய் குறையும்.

மூத்த குடிமக்கள்

தற்போது வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்து வரும் சூழ்நிலையில், மூத்த குடிமக்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில் எஸ்.பி.ஐ., ‘எஸ்.பி.ஐ. வீகேர் டெபாசிட்’  புதிய டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் கூடுதலாக 0.30 சதவீதம் வட்டி வழங்கப்படும். இந்த ரீடெயில் டேர்ம் டெபாசிட் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல். இந்த திட்டம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என அந்த வங்கி தெரிவித்துள்ளது.