கடனுக்கான வட்டியை குறைத்த பாரத ஸ்டேட் வங்கி….

 

கடனுக்கான வட்டியை குறைத்த பாரத ஸ்டேட் வங்கி….

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அனைத்து ஒரு வருட முதிர்வு கால கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் அந்த வங்கி வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி செலவினம் சிறிது குறையும்.

கடந்த சில தினங்களுக்கு முன் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்காது என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தபடியே, ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்காததால் பொதுத்துறை அதனை காரணம் காட்டி கடனுக்கான வட்டியை குறைக்காது என எதிர்பார்க்கப்பட்டது.

கடன்

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. அனைத்து ஒரு வருட முதிர்வு கால கடனுக்கான மார்ஜினல் காஸ்ட் (எம்.சி.எல்.ஆர்.) எனப்படும் அடிப்படை வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது.ஒரு வருட முதிர்வு கால கடனுக்கான மார்ஜினல் காஸ்ட் (எம்.சி.எல்.ஆர்.) எனப்படும் அடிப்படை வட்டி விகிதத்தை 7.90 சதவீதத்திலிருந்து 7.85 சதவீதமாக குறைத்துள்ளது.  இந்த புதிய வட்டி விகிதம் 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

எஸ்.பி.ஐ.

இந்த வட்டி குறைப்பால் வாடிக்கையாளர்களின் வட்டி செலவினம் சிறிது குறையும். மேலும் எஸ்.பி.ஐ. வங்கியை பின்பற்றி மற்ற வங்கிகளும் கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்புள்ளது.
 அதேசமயம் எஸ்.பி.ஐ. வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தையும் குறைத்துள்ளது. ரூ.2 கோடிக்கும் குறைவான குறித்த கால ரீடெயில் டெபாசிட்டுகளுக்கான வட்டியை 0.10 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை குறைத்துள்ளது. அதேசமயம் ரூ.2 கோடிக்கும் அதிகமான குறித்த கால பல்க் டெபாசிட்டுக்கான வட்டியை 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் வரும் 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. டெபாசிட் வட்டி குறைப்பால் அந்த டெபாசிட் செய்தவர்களின் வட்டி வருவாய் குறையும்.