கடந்த 5 வர்த்தக தினங்களில் பங்குச் சந்தையில் ரூ.3 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்….

 

கடந்த 5 வர்த்தக தினங்களில் பங்குச் சந்தையில் ரூ.3 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்….

கடந்த 5 வர்த்தக தினங்களில் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

அமெரிக்கா-சீனா இடையே முதல் வர்த்தக ஒப்பந்தம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கையெழுத்தானது. அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிந்தது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை நிதானமாக இருந்தது. கடந்த நவம்பரில் மாதத்தில் 3 மாதங்களுக்கு பிறகு நம் நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி கண்டது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் பெரும்பாலான நாட்கள் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. கடந்த 5 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 4 நாட்கள் ஏற்றம் கண்டது. நிப்டி 3 நாட்கள் மட்டுமே உயர்ந்தது.

அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தம்

கடந்த 5 வர்த்தக தினங்களின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.160.54 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த 10ம் தேதியன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.157.67 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, கடந்த வர்த்தக தினங்களில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.87 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது.

பங்குச் சந்தை

நேற்றுடன் முடிந்த கடந்த 5 வர்த்தக தினங்களில் ஒட்டு மொத்த அளவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 345.63 புள்ளிகள் உயர்ந்து 41,945.35 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 95.55 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,352.35 புள்ளிகள் நிலை கொண்டது.