கடந்த 5 தினங்களில் ரூ.6.62 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 2,075 புள்ளிகள் வீழ்ச்சி

 

கடந்த 5 தினங்களில் ரூ.6.62 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 2,075 புள்ளிகள் வீழ்ச்சி

இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவு கண்டது. சென்செக்ஸ் 2,075 புள்ளிகள் குறைந்தது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உள்நாட்டில் ஒரு வாகனத்தை விற்பனை செய்யவில்லை. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு திருப்திகரமாக அமையவில்லை. அமெரிக்கா மற்றும் சீனா இடையே மீண்டும் மோதல் போக்கு உருவாகி இருப்பது போன்ற காரணங்களால் வாரத்தின் முதல் 2 தினங்களில் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. 

வாகன தயாரிப்பு நிறுவனங்கள்

கடந்த புதன்கிழமை பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டாலும், வியாழக்கிழமையன்று சரிவை சந்தித்தது. வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று சில நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு  உயர்ந்தது போன்ற காரணங்களால்  பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

அமெரிக்கா-சீனா மோதல்

நேற்றுடன் நிறைவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.122.77 லட்சம் கோடியாக குறைந்தது. கடந்த மாதம் 30ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.129.39 லட்சம் கோடியாக உயர்ந்து இருந்தது. ஆக, கடந்த 5 வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தகத்தில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.6.62 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.

மும்பை பங்குச் சந்தை

நேற்றுடன் முடிவடைந்த இந்த வார வர்த்தகத்தில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,074.92 புள்ளிகள் சரிந்து 31,642.70 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 608.40 புள்ளிகள் குறைந்து 9,251.50 புள்ளிகளில் முடிவுற்றது.