கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரூ.820 கோடி செலவு காங்கிரஸ்

 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரூ.820 கோடி செலவு காங்கிரஸ்

2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திர பிரதேசம் மற்றும் சிக்கிம் உள்பட சில மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் ரூ.820 கோடிக்கு மேல் செலவு செய்ததாக காங்கிரஸ் கட்சி கணக்கு காட்டியுள்ளது.

அரசியல் கட்சிகள் தேர்தல் சமயத்தில் செய்த செலவுகள் மற்றும் வரவுகள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, ஒவ்வொரு கட்சிகளும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் மேற்கொண்ட  வரவு மற்றும் செலவு குறித்த கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வருகின்றன. கடந்த 31ம் தேதியன்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வரவு/செலவு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. அதில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திர பிரதேசம், சிக்கிம், ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களில் மொத்தம் ரூ.820 கோடிக்கு மேல் செலவு செய்ததாக தெரிவித்துள்ளது.

ராகுல், பிரியங்கா காந்தி

மொத்த செலவில் பிரச்சாரத்துக்காக ரூ.626.30 கோடியும், வேட்பாளருக்காக ரூ.193.9 கோடியும் காங்கிரஸ் செலவு செய்துள்ளது. அதேசமயம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் முடிவடைந்தது வரையிலான காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.856 கோடி நிதி வந்துள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகம் செலவிட்டுள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ரூ.516 கோடி மட்டுமே செலவு செய்து இருந்தது.

திரிணாமுல் காங்கிரஸ்

மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க. இன்னும் தேர்தல் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை. அதேசமயம் திரிணாமுல் காங்கிரஸ், பி.எஸ்.பி., என்.சி.பி. மற்றும் சி.பி.எம். ஆகிய கட்சிகள் தங்களது தேர்தல் வரவு/செலவு விவரங்களை தாக்கல் செய்து விட்டன. திரிணாமுல் காங்கிரஸ் ரூ.83.6 கோடியும், பி.எஸ்.பி. ரூ.55.4 கோடியும், தேசியவாத காங்கிரஸ் ரூ.72.3 கோடியும், சி.பி.எம். ரூ.73.1 லட்சமும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் செலவு செய்துள்ளதாக தகவல்.