கடந்த ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.98,202 கோடி…

 

கடந்த ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.98,202  கோடி…

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.98,202 கோடியாக குறைந்தது. கடந்த ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.02 லட்சம் கோடியாக இருந்தது.

கடந்த 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்பு வரை இருந்து வந்த அனைத்து மறைமுக வரிகளுக்கும் மாற்றாகவும், நாடு முழுவதும் ஒரே விதமான வரி விதிப்பை உறுதி செய்யும் நோக்கில் ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டது. மத்திய நிதியமைச்சர் தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சில் குழு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சந்தித்து ஜி.எஸ்.டி.யில் உள்ள இடர்பாடுகளை சரிசெய்து வருகின்றனர்.

வரி வசூல்

கடந்த ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் குறித்த தகவலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. கடந்த மாதத்தில் இந்தியாவின் மொத்த ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.98,202 கோடியாக குறைந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் 1.02 லட்சம் கோடியாக இருந்தது. அதேசமயம் 2018 ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் 4.5 சதவீதம் அதிகமாகும். 2018 ஆகஸ்டில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.93,960 கோடியாக இருந்தது.

ஜி.எஸ்.டி.

கடந்த ஆகஸ்ட் மாத ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி. வரி வசூலில், மத்திய ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.17,333 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.24,239 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.48,958 கோடியும் அடங்கும். ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரி வசூலில் இறக்குமதி வாயிலான ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.24,818 கோடியும் அடங்கும். இந்த நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை காட்டிலும் குறைந்தது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் கடந்த ஜுன் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.99,939 கோடியாக இருந்தது.