கஜ தாண்டவம் ஆடிய புயல்: பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு

 

கஜ தாண்டவம் ஆடிய புயல்: பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு

கஜா புயல் கரையை கடந்துள்ள நிலையில், புயலுக்கு இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சென்னை: கஜா புயல் கரையை கடந்துள்ள நிலையில், புயலுக்கு இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கஜா புயல் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நாகை – வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. தொடர்ந்து, தீவிர புயலில் இருந்து புயலாக மாறிய கஜா, புயலின் மொத்த கண் பகுதியும் நிலப்பரப்பில் நிலை கொண்டது. தற்போது, மேற்கு தொடர்ச்சி மலை வழியாக கஜா புயல் கேரளா நோக்கி செல்கிறது.

முன்னதாக, புயல் கரையை கடந்த போது பலத்த காற்று வீசியது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள், வீடுகள் உள்ளிட்டவை பலத்த காற்றுடன் பெய்த மழையால் கடும் சேதம் அடைந்தன.

இந்த புயலானது புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாகை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் 461 முகாம்களில் 81,698 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கஜா புயலின் கோரதாண்டவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 20-ஆக உயர்ந்துள்ளது. புதுக்கோட்டையில் 7 பேரும், தஞ்சாவூரில் 4 பேரும், கடலூரில் 3 பேரும், திருவாரூரில் 3 பேரும், திருச்சியில் ஒருவரும், சிவகங்கையில்2 பேரும், உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இறந்தவர்களில் 6 பேர் பெண்கள் ஆவார்கள்.

கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் நிதி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.