கஜா புயல் வலு குறைந்தது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

 

கஜா புயல் வலு குறைந்தது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கஜா புயல் தீவிர புயலில் இருந்து புயலாக மாறி அதன் வலு குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

சென்னை: கஜா புயல் தீவிர புயலில் இருந்து புயலாக மாறி அதன் வலு குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.  தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டது. இந்த புயலானது, இன்று அதிகாலை 3.30 மணியளவில் நாகை, வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.

கஜா புயல் காரணமாக பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நாகை, கடலுர், ராமநாதபுரம், மதுரை, திருப்பூர், திருவாருர், புதுக்கோட்டை, தஞ்சை, சிவங்கை, அரியலூர், தேனி, விழுப்புரம், திருச்சி,  கரூர், திண்டுக்கல்,  காரைக்கால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

விருதுநகர், தூத்துக்குடி, சேலம், ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலின் கோர தாண்டவத்தால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கஜா புயலின் வலு குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும்,  கஜா புயல் தீவிர புயலில் இருந்து புயலாக மாறியுள்ளது. புயலானது அதிராமபட்டிணத்திற்கு வடமேற்கே 20 கி.மீ தொலைவில் தற்போது உள்ளது. புயலின் மொத்த கண் பகுதியும் நிலப்பரப்பில் நிலை கொண்டுள்ளது. அடுத்து வரும் சில மணி நேரங்களில் 80-100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.