கஜா புயல்: ரூ.25 லட்சம் இழப்பீடு; அரசு வேலை வழங்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

 

கஜா புயல்: ரூ.25 லட்சம் இழப்பீடு; அரசு வேலை வழங்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கஜா புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

சென்னை: கஜா புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயலானது வேதாரண்யம் – நாகை இடையே கரையை கடந்தது. அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்த காரணத்தால், ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. குடிசை வீடுகள் பல காற்றில் பறந்த நிலையில் மின்கம்பங்களும் ஆங்காங்கே சாய்ந்து விழுந்துள்ளன. தொலைத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர்,  புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான சேதத்தை கஜா புயல் ஏற்படுத்திச் சென்றுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனிடையே, புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46-ஆக உயர்ந்துள்ளது. ஆண்கள் 26 பேர், பெண்கள் 17 பேர், குழந்தைகள் மூவர் என இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, மீட்பு பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை என்று முதல்வர் சொல்வது செயல் வடிவமாக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.